புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2019

ஈழவிடுதலை போராட்டத்தில் பெரும் பிணைப்போடு இருந்த புலிகளின் கடலோடி சீதாராம்: ச.ச. முத்து

சீதா அண்ணா அல்லது சீதாராம் அண்ணா இயற்கை எய்திவிட்டார் என்ற சேதி தொலைபேசி வழியாக வந்து காது இறங்கியது.இந்த நேரம் சீதாராம் அண்ணாவின் உடல் தமிழ்நாட்டின் வேதாரண்யம் கோடிக்கரையில் தீயில் சாம்பலாகி இருக்கும்.

அவரின் சாம்பலின் ஏதோ ஒரு துகள் காற்றில் பறந்து அவர் நேசித்த தமிழீழமண்ணில் கலந்திருக்கும். கலக்காமலும் சென்றிருக்கும். சீதாராம் அண்ணா ஏதோ பெரிய அரசியல் சித்தாந்தத்துடன் எமக்கு உதவியர் என்று சொல்லமாட்டேன்.


ஆனாலும் ஏதோ ஒரு உள்ளுணர்வு ஏதோ ஒரு தொடர்பு இருந்திருக்கு அறுபடாத தொப்புள்கொடியாக.ஆனாலும் சீதாராம் அண்ணாவின் நினைவுகள் இந்த இரண்டு நாட்களாக எழுந்து எழுந்து முட்டிமோதி ததும்பி நிற்கிறது.

சாள்ஸ்அன்ரனி என்கிற சீலனுக்கும் செல்லக்கிளி அண்ணாவுக்குமாக வெளிப்படையாக கதறி அழுத ஒருவர் ஆக அவரை கண்டதுதான் அவருடனான முதல் சந்திப்பு.

போராளிகளின் வட்டத்துக்கு வெளியே எமது முதல் போராளிகளான சங்கர் சீலன் செல்லக்கிளி ஆனந்துக்காக பகிரங்கமாக அழுத ஒரு பொதுமகனின் கண்ணீராக அதை நான் கண்டேன்.

இன்றும் அந்த பின்னிரவு நினைவுக்குள் நிற்கிறது.
1983 யூலை இனப்படுகொலை கோரதாண்டவம் ஆடி தமிழர்வாழ்வில் பெருத்த மாற்றங்களை உருவாக்கிய அந்த நாட்களின் பின்பாக வந்த ஓரிரு கிழமைக்கு பின்னர் முக்கியமான வேலை ஒன்றாக என்னையும் ரகுவையும் (குண்டப்பா) தலைவர் தமிழ்நாடு போக சொல்லி இருந்தார்.இனப்படுகொலை நாட்களுக்கு பின்னர் முதலாவதாக தமிழ்நாடு செல்லும் விடுதலைப்புலிகளாக நாமே இருந்தோம்.அதனால் யார் யாரை சந்திப்பது என்பது பற்றி நிறையவே தலைவர் சொன்னார்.அந்த நேரம் படகுகள் எதுவும் எம்மிடம் சொந்தமாக இல்லாத பொழுதில் இரண்டு படகோட்டுபவர்களை கதைத்து எம்மை அனுப்பியும் வைத்தார்.பொலிதீன் சிறு பைக்குள் இறுகக்கட்டிய பணமாக இருநூறுரூபா சொச்சம் எமது செலவுக்காக தந்தும் அனுப்பினார்.

ஊர் அடங்கி நேவி ஓட்டம் எல்லாம் பார்த்து வெளிக்கிட்டு எமது படகு கோடிக்கரையின் காட்டு பகுதியை அடைந்து என்னையும் ரகுவையும் இறக்கிவிட்ட போது நேரம் நள்ளிரவு 11 மணிக்கு மேலாகி விட்டது.


தலைவர் தந்துவிட்ட ஒரு டபிள்பெரல் சொட்கண் துப்பாக்கி. அதற்கு குறி பாhக்கும் மின்னி போட வேணும் என்று பேபி அண்ணைக்கு குடுத்து சரி பார்த்து செய்து மீண்டு வரும்போது கொண்டுவர சொல்லி தந்த அந்த துப்பாக்கி ஒரு பொலிதீன் பைக்குள் சில பிரசுரங்கள் அவற்றுடன் அந்த கோடிக்கரை தேசிய காட்டுக்குள்ளாக நடந்து ஒரு இரண்டு மணியளவில் ஒரு வீட்டின் கதைவை ரகு தட்டியபோது பலத்த நாய்க்குரைப்புகளுக்கு பின்னர் கதவு திறக்க கோடிக்கரை சண்முகம்அண்ணா நின்றிருந்தார் அவருடன் இன்னும் ஒருவர் முறுக்கிய மீசையுடன். சண்முகம் அண்ணாவின் மிக நெருங்கிய உறவினரான அவர்தான் சீதா அண்ணா.

அந்த இரவில் அந்த வீட்டு பெண்கள் பசியுடன் நாம் இருப்போம் என்று சமைத்தார்கள்.



ஆனாலும் சீதா அண்ணாவின் முகம் எம்மை ஏதோ கேட்க வாய் துடித்து கண்கள் அழுவதற்கு தயாராக நின்றது.எம்முடன் கொண்டு சென்ற சீலன் ஆனந்த் செல்லக்கிளி அண்ணாவுக்கு நாம் தாயகத்தில் அச்சிட்ட பிரசுரம் எமது பொலிதீன் பைக்குள் இருந்து காட்டியதும் அந்த இரவில் வெடித்து அழ ஆரம்பித்துவிட்டார். சீதாராம் அண்ணா. அந்த வீட்டின் பெண்களும் பெருங்குரல் எடுத்து கதற ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் எல்லோருக்கும் சீலனையும் செல்லக்கிளி அண்ணாவையும் மிக நன்கு தெரியும். சில மாதங்களுக்கு முன்னர்தான் சீலன் சாவச்சேரி காவல்நிலைய தாக்குதலில் பட்ட காயத்துக்கு தமிழகத்தில் சிகிச்சை முடித்து சீதாராம் அண்ணாவிடம் வந்து தலைவருடன் நின்றிருக்கிறான்.

செல்லக்கிளி அண்ணாவை மிக நீண்ட காலமாகவே சீதாராம் அண்ணாவுக்கு தெரியும்.



போராளிகளுக்காக பொதுமக்கள் சிந்திய ஒரு கண்ணீரை முதலில் பார்த்தது சீதாராம் கண்களில் தான்.தலைவர் பற்றி அவரது பாதுகாப்பு பற்றி சீலனின் இறுதி நாட்கள் பற்றி செல்லக்கிளி அண்ணாவின் கடைசி பொழுதுகள் பற்றி அத்தனை கரிசனையுடனும் சொந்த பிள்ளைகளை இழந்தபோன்ற ஆறாத்துயருடனும் விசாரித்து சீதாராம் அண்ணா சொரிந்த கண்ணீர் என்பது இந்த விடுதலைமீது அவர் வைத்திருந்த மாறாத பற்றை காட்டியது.

சீதாராம் அண்ணா ஏதோ ஒரு பெரும்பிணைப்பு இந்த போராட்டத்துடன் கொண்டிருந்தார்.

தலைவர் முதன்முதலில் சிங்கள காவல்துறையால் தேடப்பட் டபொழுதுகளில் போய் இருந்த வேதாரண்யம் கருப்பம்புலம் பகுதியில் இருந்து சீதாராம் அண்ணாவை அடிக்கடி கண்டு கதைத்து இருக்கிறார்.

அந்த வேதாரண்யம் மண்ணும் கோடிக்கரை மண்ணும் 19 வயது நிரம்பிய ஒரு தமிழ்இளைஞன் நெஞ்சமெல்லாம் விடுதலைக்கனலுடன் தமிழர்களுக்கான விடுதலை அமைப்பு ஒன்றை கட்டி எழுப்பும் கனவுகளை எப்போதும் நெஞ்சை நிமிர்த்தி சொல்லியபடி இருக்கும்.

அந்த கோடிக்கரை வேதாரண்யம் பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பு என்றால் பொதுமக்கள் மனங்களில் எழுவது ஆரம்பத்தில் சண்முகம்அண்ணா சீதாராம்அண்ணா பெயாடகளே.



பயிற்சிக்காக நிறைய இளைஞர்களை தமிழகம் கொண்டு சென்ற பொழுதுகளில் தமிழீழவிடுதலைப்புலிகள் தனித்தன்மையுடன் இருக்கவே விரும்பினோம்.வேதாரண்யம் கரையில் இளைஞர்களை இறக்குவதில் ஆரம்பித்து அவர்களை பகுதி பகுதியாக சென்னை மதுரை சேலம் திண்டுக்கல் என்று அனுப்புவது வரை எல்லாமே தனித்தன்மையாக ஓரளவுக்கு ரகசியமாக இருக்கவே விரும்பினோம்.அதற்கு மிகப்பெரும் பக்கபலமாக வேதாரண்யத்தில் கடல்தளமுகாம் போன்ற ஒன்றை வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு பின்பாக உள்ள நாலுகால் மண்டபத்துக்கு அருகில் அமைப்பதற்கு சீதாராம் அண்ணா மிக உதவியாக இருந்தார்.

இப்படி நிறையவே சொல்லலாம் அவர் பற்றி.

பல ஆயிரம் வருசத்து நீண்ட மொழி செழுமையும் வரலாறும் கொண்ட ஒரு இனத்தின் பெரும் விடுதலைக்கான கனவுகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு 19 வயது இளைஞனாக தலைவர் பல நாட்கள் சாப்பாடு இல்லாமல் பல நாட்கள் தொடர்ந்து குதிரைக்கு போடும் கொள்ளு ( அதுதான் அப்போது மிக மலிவானது ) அவித்து சாப்பிட்டு கண்கள் மங்க அதே நேரம் நெஞ்சம் முழுக்க உறுதியுடன் திரிந்த வேதாரண்யம் கோடிக்கரை கருப்பம்புலம் பகுதிகளில் அவருக்கு மிக பக்கபலமாக நின்றிருந்தவர்களில் சீதாராம் அண்ணாவும் ஒருவர்.தமிழர்விடுதலைப் போராட்டத்தின் முதலாவது தானியங்கி ரைபிள் ஜி3 உடன் தலைவர் தாயககரைக்கு புறப்படும்போதும் .இதே கோடிக்கரையில் தான் படகுக்காக காத்திருந்தார்.

அதற்கு பின்னரும் முன்னரும் காயமடையும் போராளிகளை காவிச் செல்லும் படகுகளுக்கு ஒரு கலங்கரை விளக்காக கோடிக்கரையும் சண்முகம்அண்ணாவும் சீதா அண்ணாவும் இன்ன பிறரும் விளங்கினார்கள்.



பின்பொருநாள் 1983 இனப்படுகொலைக்கு பிறகு வந்த நாட்களில் நானும் ரகுவும் (குண்டப்பா) போனபோது அந்த புலர்ந்தும் புலராத பொழுதில் வேதாரண்யம் பஸ் நிலையம் வந்து திருத்துறைப்பூண்டி பஸ்ஸில் ஏற்றி விட்டு கையசைத்து நின்றார். பிறகு வந்த மாதத்தில் பெரும் தாகையான இளைஞர்கள் பயிற்சிக்காக வந்து அவரது ஊரில் இறங்கிய போது அதே உற்சாகத்துடன் ஓட்டிகளுடன் உதவியபடி திரிந்தவர்.கோடிக்கரையில் சீதாராம் அண்ணாவின் உடல் எரிந்த சாம்பலின் ஏதோ ஒரு துகள் எழுந்து நந்தி கடலை தேடி இருக்கும்.

2009 பிறகும் பல முறை அவருடன் கதைக்கும் சந்தர்ப்பங்கள் வாய்திருக்கு தொலைபேசியில்.

ஒரு பேரனுடன் அல்லது ஒரு பிள்ளையுடன் கதைப்பதை போலவே வாஞ்சையுடன் கதைப்பார்.



எல்லா கதையும் ஒரு புள்ளியில் வந்து நிற்கும். ' முத்து எப்போ அந்த பிள்ளையை திரும்ப பார்ப்பேன் என்று இருக்கிறது. என்று அந்த அதிமானுடனை பற்றி கதைப்பார்.

ad

ad