புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2020

நளினி சிறையில் இருப்பது சட்டப்பூர்வமாகவா?
நளினி சிறைக்குள் சட்டப்பூர்வமாக உள்ளாரா? அல்லது சட்டவிரோதமாக உள்ளாரா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘‘கடந்த 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை கைதியாக சிறை தண்டனையை அனுபவித்து வருகிறேன். நன்னடத்தை காரணமாக பலரை விடுதலை செய்த தமிழக அரசு, எங்கள் 7 பேரையும் விடுதலை செய்யவில்லை. நான் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த 2018 செப்.9-ம் திகதி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

ஆனால் அந்த தீர்மானம் மீது ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டப்படி அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்று மறுநாளே எங்கள் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் உத்தரவிட்டு இருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. எனவே, சட்டவிரோதமாக சிறையில் உள்ள என்னை உடனடியாக விடுதலை செய்ய சிறைத் துறைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது. நளினியின் மனு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், ‘‘கருணை மனுமீது ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுத்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. அதன்படி, 7 பேர் விடுதலை தொடர்பான கருணை மனு மீது ஆளுநர் தனக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சட்ட அதிகாரத்தின்படி தன்னிச்சையாக முடிவெடுத்துக் கொள்ளலாம்’’ என தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இதே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், ‘‘மனுதாரரான நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரவில்லை. 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அதை சட்டப்படி ஆளுநருக்கு பரிந்துரை செய்தபிறகும், சட்டவிரோதமாக சிறைக்குள் அடைத்து வைத்திருப்பதால், அது நியாயமற்றது என்றுகூறி விடுதலை செய்யக் கோருகிறோம்.

எனவே நளினி சார்பி்ல் தாக்கல்செய்யப்பட்டுள்ள இந்த ஆட்கொணர்வு மனு சட்டப்பூர்வமாக செல்லத்தக்கது. அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என பல்வேறு தீர்ப்புகளின் வாயிலாக உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது. நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனஅரசாங்கமே தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அதில் ஆளுநர் கையெழுத்து போடக்கூட தேவையில்லை. இந்த விஷயத்தில் தமிழகஅரசே தன்னிச்சையாக முடிவெடுக்கலாம். எனவே சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும்’’ என வாதிட்டார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன்,‘‘ தமிழக அமைச்சரவை, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளதேயன்றி, இந்த விஷயத்தில் எந்தவொரு உத்தரவையும் தமிழக அரசு பிறப்பிக்கவில்லை. அவ்வாறு நேரடியாக உத்தரவு பிறப்பிக்கவும் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘தற்போது நளினி சிறைக்குள் சட்டப்பூர்வமாக உள்ளாரா? அல்லது சட்டவிரோதமாக உள்ளாரா? என்பது குறித்து தமிழக அரசு பிப்.18-க்குள் பதில் அளிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத் துள்ளனர்.

ஏற்கெனவே பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றமும் இதுதொடர்பாக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள தீர்மானத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தமிழக அரசு கேட்டு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருப்பது குறிப் பிடத்தக்கது

ad

ad