பக்கங்கள்

பக்கங்கள்

3 ஆக., 2012

தெளிவற்ற முடிவுகளோடு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தடுமாறுகின்றதா?
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 06:49.54 AM GMT ]
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்று மக்களின் அங்கீகாரத்தோடு அங்கு செயற்படும் ஒரேயொரு அமைப்பு தமிழத் தேசிய கூட்டமைப்பாகும்.
ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் தமிழகத்தில் நமது அரசியல் பிரச்சினைகள் மீது ஆர்வம் கொண்டவர்களும் இன்னமும் ஏற்றுக் கொண்டதும் நம்பிக்கை வைத்துள்ளதுமான அரசியல் அமைப்பும் இந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகும்.
ஆனால் விடுதலைப் புலிகளை அழிப்பதுதான் உடனடியாக செய்யப்பட வேண்டிய ஒன்று என்று இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து முடிவுகளை எடுத்ததன் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இந்த இரண்டு அரசாங்கங்களும் அணைப்பது போன்று வெளியே காட்டிக் கொண்டாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகள் நடந்து வந்த பாதையில் தான் சென்று கொண்டிருக்கின்றது என்றும் விடுதலைப் புலிகளின் பெயரை அடிக்கடி உச்சரித்த வண்ணம் அரசியல் செய்யும் இயக்கம் என்றும் கணித்து வைக்கத் தொடங்கின.
விடுதலைப் புலிகளை அழித்ததன் பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் தமிழர் பிரதேசங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றிகளை ஈட்டியதால் தங்கள் விருப்பமின்மையை அதன் மீது உடனடியாகக் காட்ட முடியாத நிலையில் இலங்கையும் இந்தியாவும் சற்று “அடக்கி வாசிக்கத்” தொடங்கின.
ஆனால் அவர்கள் எடுத்த தீர்மானம் என்னவென்றால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற அரசியல் அமைப்பை சிறிது சிறிதாக தமிழர்களுக்கு அவசியம் அற்ற அரசியல் அமைப்பாக காட்சிப்படுத்துவது என்பதுதான்.
இதன்காரணமாகத்தான் அரசாங்கத்தோடு மறைமுகமாக நட்பைக் கொண்டுள்ள ஆனந்தசங்கரி முன்வரிசைக்கு கொண்டுவருவதன் மூலம் தமிழரசுக் கட்சியையும் அவரையும் அவரோடு இணைந்தவர்களையும் தமிழர் அரசியலில் உட்கொண்டு வரும் எண்ணமும் இலங்கை இந்திய அரசாங்கங்களின் மனங்களில் உதித்த ஒரு யோசனைதான்.
ஆனாலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்றாலும் தமிழரசுக் கட்சியென்றாலும் அவற்றுள் முன்வரிசையில் இரா சம்பந்தனும், மாவை சேனாதிராஜாவும் அமர்ந்திருப்பதையே அவர்களும் தமிழ் மக்களும் விரும்புவார்கள் என்ற காரணத்தால், மறைமுகமாக ஒரு திட்டத்தை இலங்கையும் இந்தியாவும் தீட்டியிருக்க வேண்டும்.