பக்கங்கள்

பக்கங்கள்

30 ஆக., 2012


இலங்கையில் காணாமல்போனவர்களின் நிலைகுறித்து பிரத்தியேக கவனம் செலுத்துங்கள்: நா.தமிழீழ அரசாங்கம் கோரிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 21வது கூட்டத் தொடரில், இலங்கைத் தீவில் காணாமல்போயுள்ளவர்களின் நிலைகுறித்து, பிரத்தியேக கவனம் செலுத்த வேண்டுமென, காணாமல்போனோருக்கான ஐ.நாவின் ஆய்வுக்குழுவிடம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் காணாமல்போயுள்ளவர்கள் தொடர்பில் களஆய்வினை மேற்கொள்வதற்கு, ஐநாவின் ஆய்வறிஞர் குழுவினருக்கான உள்நுழைவு அனுமதியினை சிறிலங்கா அரசாங்கம் மறுத்துவரும் நிலையில், ஐநா ஆய்வுக்குழுவினரிடம் இக்கோரிக்கையினை  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்வைத்துள்ளது.
இலங்கையில் காணாமல்போயுள்ளவர்கள் தொடர்பில், 12 460 முறைப்பாடுகள், காணாமல்போனோருக்கான ஐ.நாவின் ஆய்வுக்குழுவினரிடம் உள்ளன.
இது தொடர்பிலான கள விசாரணகளுக்கு, ஐநா முன்வைத்திருந்த பொறிமுறைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்திருந்ததோடு, ஐ.நா ஆய்வுக்குழுவினரின் எழுத்து பூர்வமான கேள்விகளுக்கு பதில் கூறவும் சிறிலங்கா அரசாங்கம் மறுத்திருந்தது.
இந்நிலையில், சிறிலங்கா அரசாங்கத்திடம் மூடிமறைப்பதற்கு ஏதுவும் இல்லையெனில், எதற்காக காணாமல்போனோர் தொடர்பிலான ஐ.நாவின் ஆய்வுக்குழுவினருக்கான உள்நுழைவிற்கு, சிறிலங்கா அனுமதி மறுக்கிறது என கேள்வி எழுப்பியுள்ள நா.த.அரசாங்கத்தின் இனவழிப்பு, போர்குற்றம், மானிடத்துக்கெதிரான குற்றவிசாரணைகளுக்கான அமைச்சர் டிலக்ஷன் மொறிஸ், காணமல்போன பல பெண்கள், சிறிலங்கா அரச படையினரது பாலியல் அடிமைகளாக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் கவலைதருகின்ற விடயமாகவுள்ளதெனத் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனோருக்கான அனைத்துலக விழிப்பு நாளான இன்று, இலங்கை உட்டபட பல்வேறுபட்ட பகுதிகளிலும், விழிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதோடு, பல்வேறுபட்ட மனித உரிமை அமைப்புக்களும் ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
காணாமல்போன குடும்பத்தவர்களின் அங்கத்தவர்கள், சிறிலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்திருத்த போதும், ஆணைகுழு அதிகாரிகளின் வாக்குமூலங்களை மட்டுமே சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தியிருந்ததோடு, காணாமல்போனவர்களது குடும்பத்தவரின் வாக்குமூலங்களை இருட்டடிப்பு செய்திருந்த விடயத்தினையும் , அமைச்சர் டிலக்ஷன் மொறிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கையில் காணாமல்போனவர்கள் தொடர்பாக, ஐநாவின் நடவடிக்கைக் குழுவின் மேற்பார்வையில்சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என வவுனியாவில் இடம்பெற்ற சர்வதேச காணாமல்போனோர் விழிப்பு நிகழ்வில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐநாவின் நடவடிக்கை குழுவானது காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்களைச் சந்தித்துப் பேசுவதற்கும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழர்களை எப்போதுமே அச்சத்துக்குள்ள வைத்திருக்கும் உத்தியாக காணாமல்போதலை சிறிலங்கா அரசு கைக்கொண்டுவரும் நிலையில், இலங்கைத்தீவில் காணாமல்போயுள்ளவர்களின் உண்மையான விபரத்தினை, சிறிலங்கா அரசாங்கம் வெளியிடவேண்டுமெனவும், நாடுகடந்த தமீழீழ அரசாங்கமானது இந்நாளில் அனைத்துலகத்தின் முன் னால் அறைகூவலாகவும் விடுத்துள்ளது.