பக்கங்கள்

பக்கங்கள்

24 ஆக., 2012


பிள்ளையான் ஓரம்கட்டப்படுகிறார்! மட்டு. கோத்தபாய நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவில்லை!
இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் பலரும் நேற்று முன்நாள் மட்டக்களப்பில் நடத்திய அபிவிருத்திக் கூட்டத்தில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் பங்கேற்கவில்லை. அவருக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று தெரியவருகிறது.
கோத்தாபாய ராஜபக்சவின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மட்டக்களப்பு அபிவிருத்தி குறித்து ஆராய இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு அபிவிருத்தி குறித்து ஆராயப்பட்ட முக்கியமான இந்தக் கூட்டத்தில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் பங்கேற்காதது அவர் சிறிலங்கா அரசினால் ஓரம்கட்டப்படுகிறார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலானா,
சந்திரகாந்தன் இப்போது முதல்வர் இல்லை. ஆகவே அந்தக் கூட்டத்தில் பங்கற்க வேண்டிய தேவை அவருக்கு இல்லை.
சந்திரகாந்தன் இந்த நிகழ்வில் பங்கேற்காததால், இலங்கை அரசாங்கம் அவரை ஓரம்கட்டுகிறது என்ற முடிவுக்கு வரமுடியாது. என்று தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 8ம் நாள் கிழக்கு மாகாணசபைக்கு நடைபெறவுள்ள தேர்தலில், ஆளும்கட்சி வெற்றியீட்டினால் சந்திரகாந்தன் மீண்டும் முதல்வராக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
இலங்கையின் பிரதியமைச்சர் முரளிதரனின் சகோதரி இந்தத் தேர்தலில் போட்டியிடுவதால் அவரை கிழக்கு முதல்வராக்க முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.