பக்கங்கள்

பக்கங்கள்

13 ஆக., 2012


டெசோ தீர்மான விவாதத்தில் கலந்துகொண்ட ஈழத் தமிழர்கள் பேசத் தடுத்து நிறுத்திய திமுகவினர்
நேற்று ஞாயிறு காலை சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டு தீர்மான விவாதத்தில் கலந்துகொண்ட ஈழத்தமிழர் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடள் அவர்களது கருத்தையும் திமுக வினர் நிராகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுபற்றி தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நேற்றைய தினம், சென்னை நட்சத்திர ஹோட்டல் அக்ஹட் மெட்ரோ பொலிடனில் நடைபெற்ற டெசோ தீர்மானம் குறித்த விவாதத்தில் 2 ஈழத் தமிழர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள் மீதான விவாதத்தை கலைஞர் தலைமையேற்று நடத்த மு.க.ஸ்டாலின், ரி.ஆர்.பாலு, சுபவீரபாண்டியன், கனிமொழி, அமைச்சர் பொன்முடி, போன்றவர்கள் உடன் இருந்தனர்.
அதில் கலந்துகொண்ட ஈழத் தமிழர்கள் இருவரின் ஒருவர், எழுந்து ஈழத்துக்கும், தமிழ் ஈழத்துக்குமே வித்தியாசம் தெரியாத இந்திய மத்திய அரசு, 13 வது திருத்தச் சட்டம் மூலமே இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்று கூறுவது முட்டாள்தனமானது என தனது கருத்தை ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
இவர் பேசும்போது குறுக்கிட்ட ரி.ஆர்.பாலு, திரு.கண்ணன் அவர்களைப் பேசவிடாது தடுத்தார்!
இதனைத் தொடர்ந்து, தாம் கூறவந்ததையாவது சொல்லவிடுமாறு அவர் வேண்டிக்கொண்டார்.
தாம் ஒரு ஈழத் தமிழர் என்றும், தமிழ் ஈழத்தில் வாழ்ந்துவரும் தமிழர்கள் அந் நாட்டின் பூர்வீகக் குடிமக்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழீழத்தில் வாழும் தமிழர்கள் ஒரு தேசிய இனம் எனக் குறிப்பிட்ட திரு.கண்ணன் அவர்கள், தம்மை சிறுபான்மை இனத்தவர்கள் என்று கூறவேண்டாம் என்பதனையும் ஆணித்தரமாகக் கூறினார்.
இதனிடையே குறுக்கிட்ட எம்.பி கனிமொழி, ஏன் 13 வது திருத்தச் சட்டத்தை நீங்கள் எதிர்க்கிறீர்கள்? குறைந்த பட்சம் ஒரு காரணத்தையாவது கூறமுடியுமா என வினவினார்.
காணி, மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் அதில் சரியான அலகில் பங்கிடவில்லை என்றும், 13 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி தமிழர்களுக்கு தீர்வு பெறப்பட்டால், அது ஈழத் தமிழர்களை சிங்களவர்களிடம் நிரந்தரமாகவே அடிமையாக்கிவிடும் என்பதனை அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் அடித்துக் கூறினார்.
கடும் ஆங்கிலப் புலமையும், ஈழத் தமிழிலும் அவர் கூறிய இவ் வார்த்தைகள் அங்கே வந்திருந்த மொராக்கோ, ஸ்வீடன், நைஜீரியா, மலேசியா, துருக்கி, ஆஜன்டீனா போன்ற நாடுகளின் பிரமுகர்களைக் கவர்ந்தது.
அவர்கள் திரு.கண்ணனிடம் 13 வது திருத்தச் சட்டம் தொடர்பாக கேட்டறிய ஆரம்பித்த வேளை மீண்டும் குறுக்கிட்ட ரி.ஆர் பாலு, டெசோ தீர்மானங்கள் குறித்து விவாதிக்கவே இந்த அரங்கம் கூட்டப்பட்டதாகவும், வேறு விடயங்கள் குறித்து ஆராய இது கூட்டப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
சுபவீரபாண்டியன், கனிமொழி ஆகியோரின் பலத்த எதிர்புக்கு மத்தியிலும் கருத்தரங்கில் கலந்துகொண்ட் இந்த ஈழத் தமிழர் இந்திய மத்திய அரசைக் கண்டிக்க தவறவில்லை!
டெசோ தீர்மானத்தில், மேலும் 2 புதிய தீர்மானத்தை சேர்த்துக்கொள்ள முடியுமா என ஈழத் தமிழரான திரு.கண்ணன் கேள்வி எழுப்பினார்.
13 வது திருத்தச் சட்டத்தை டெசோ ஆதரிக்கவில்லை என்றும், வடக்கு கிழக்கு தமிழர்களைப் பற்றி மட்டுமே பேசாமல் மலையகத் தமிழர்களாகிய இந்திய பூர்வீகத் தமிழர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இதில் மலையகத் தமிழர் பாதுகாப்பு குறித்து தாம் கவனம் செலுத்துவதாக கலைஞர் பதிலளித்தார். ஆனால் 13வது திருத்தச் சட்டம் தொடர்பாக அவர் வாயே திறக்கவில்லை.
பின்னர் நடைபெற்ற விவாதத்தில், ஏற்கனவே போடப்பட்ட 11 தீர்மானத்தில் மேலும் 3 புதிய தீர்மானங்களை தாம் இணைப்பதாக சு.பவீரபாண்டியன் தெரிவித்தார்.
ஜெயலலிதா அரசைக் கண்டிப்பது, இலங்கை அரசின் மிரட்டலைக் கண்டிப்பது, குடிவரவு தொடர்பான மாற்றத்தை பரிந்துரைப்பது என்று தீர்மானிக்கப்பட்டதே தவிர, ஈழத் தமிழர்கள் விடுத்த கோரிக்கை எதனையும் தி.மு.கவினர் ஏற்றுக்கொள்ளவில்லை.
பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கும், மிகவும் அனுபவமிக்க அரசியல்வாதிகளோடு போராடி தமது கருத்தை முன்வைத்த ஈழத் தமிழனின் துணிச்சலைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும் அவர்களுக்கு பேச்சுரிமை மறுக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.