பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2012


மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா பொலிஸில் சரண்! 24ம் திகதி வரை விளக்கமறியல்
கொழும்பு இரவு களியாட்ட விடுதியில் இராணுவ மேஜரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா பொலிஸில் சரணடைந்துள்ளார்.
இவருடன் ரேஹன் விஜயவர்தன மற்றும் ஏனைய சந்தேகநபர்களும் பொலிஸில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இவர்கள் கொம்பனித்தெரு பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலையில் கொம்பனித்தெரு பொலிஸ்நிலையத்தில் சரணடைந்த மாலக சில்வா உட்பட்ட ஏழு பேரையும் பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
இராணுவ அதிகாரி ஒருவரை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள  மாலக சில்வா, றெஹான் விஜயரட்ன மற்றும் 5 பேரையும் எதிர்வரும் 24ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
குற்றச்சாட்டை ஏற்க மறுப்பு
இதேவேளை, கடந்த 8ம் திகதி இராணுவ மேஜரொருவரை தாக்கி அவரது கைத்துப்பாக்கியை பறித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வா மறுத்துள்ளார்.
ஹோட்டலில் நைட் கிளப்பில் ஏற்பட்ட குழப்பத்தின்போது யாரோ சிலர் இராணுவ மேஜரை தாக்கினர். அத்தருணத்தில் அவரது கைத்துப்பாக்கி கீழே விழுந்துள்ளது. எனது வாகன சாரதி இக் கைத்துப்பாக்கியை எடுத்து பொலிஸில் ஒப்படைத்தார் என அவர் கூறினார்.
அன்றையதினம் கொழும்பிலுள்ள ஹில்டன் வீட்டுத்தொகுதியில் தனது நண்பர்களுடன் தேர்தல் முடிவுகளை தான் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
நான் தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்த பின்னர் வீட்டிற்குப் போக தயாரானபோது 2 பேரை  அவதானித்தேன். இவர்களில் ஒருவரை வெளிநாட்டுப் பயணங்களின்போது  பல தடவைகள் நான் சந்தித்துள்ளேன்.
நாவல நிஹால் என்னும் இவர் 'பொடி சூட்டி' என அழைக்கப்படுபவராவர். நான் அவருக்கு ஹலோ சொன்னேன். பின் வந்த மற்றைய நபர் இவன்; யாரென அவர்களிடம் கேட்டார்.  என்னைப் பற்றி அவன், இவனெனப் பேசுவதற்கு நீ யாரென நான் கேட்டேன்' என அவர் கூறினார். 
இவ்வாறான வாய்த்தர்க்கத்தை விட வேறு சம்பவங்கள் இடம்பெறவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.