பக்கங்கள்

பக்கங்கள்

29 செப்., 2012



விகடன்
டக்ளஸ்... பொலிஸ் கண்ணாமூச்சி! பொலிஸ் பதில் சொல்லுமா?

இந்தியாவில் 'குற்றவாளி’. இலங்கையில் 'அமைச்சர்’. அத்தகைய 'பெருமை’ டக்ளஸ் தேவானந்தாவுக்கு உண்டு!  டக்ளஸ் தேவானந்தா இப்போது, இலங்கை அமைச்சராக இருந்தாலும் தமிழகத்தில் 18 ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளி.
ஆனால், அந்த விசாரணைக்கு வராமலேயே தப்பித்து வருகிறார் அவர். 'டக்ளஸ் தேவானந்தாவை கைதுசெய்து இந்தியா கொண்டுவர வேண்டும்’ என்று வழக்குத் தொடுத்துள்ள வழக்கறிஞர் புகழேந்தியிடம் இதுபற்றி பேசியபோது.
''1986-ம் ஆண்டு, சென்னை சூளை மேட்டில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இலங்கையைச் சேர்ந்த சில இளைஞர்கள் தங்கி இருந்தனர். அவர்கள் பெண்களைக் கேலி செய்வது, கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்வது என்று, தொடர்ந்து ரகளை செய்து வந்தனர்.
நவம்பர் 1-ம் தேதி, அந்த இளைஞர்களில் சிலர் அருகில் இருந்த கடையில் வாழைப்பழம் வாங்கிவிட்டு காசு கொடுக்காமல் சென்றதுடன், கடைக்காரரையும் கடுமையாகத் தாக்கினர். அந்த இடத்தில் இருந்த சிலர் இதைத் தட்டிக்கேட்கவும், அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் தங்கள் அறைக்குச் சென்று ரிவால்வர், ஏ.கே.47 ரக துப்பாக்கி ஆகியவற்றை எடுத்துவந்து பொதுமக்களை மிரட்டினர். அவர்களில் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர். ஏ.கே. 47 துப்பாக்கி வைத்திருந்த டக்ளஸ் தேவானந்தா, பொதுமக்களில் ஒருவராக நின்றிருந்த திருநாவுக்கரசு என்பவரை சுட்டுவிட்டார்.
திருநாவுக்கரசு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுதொடர்பாக, டக்ளஸ் தேவானந்தா உட்பட 10 பேர் சூளைமேடு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, ரிமாண்ட் செய்யப்பட்டனர். ஜாமீனில் வந்த டக்ளஸ், வழக்கில் ஆஜராகாமல் இலங்கைக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.
வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாத தால், அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. நீதிமன்றம் அப்படி அறிவித்து 18 ஆண்டுகள் ஆகியும் இதுவரை டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், 2010-ம் ஆண்டு அரசு விருந்தினராக இந்தியா வந்த அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.
சிறுவனைக் கடத்தி பணம் பறிக்க முயன்றதற்காக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், இலங்கைத் தமிழர் தகவல் மைய இயக்குனர் வளவன் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் அந்தக் காலகட்டத்தில் டக்ளஸ் தேவானந்தா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளிலும் அவர் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, அவரைக் கைதுசெய்ய தமிழக காவல்துறை இன்டர்போல் பொலிஸின் உதவியை நாட வேண்டும். அவருக்கு உரிய தண்டனையை விரைவில் வழங்க வேண்டும் என்று நாங்கள் வழக்குத் தொடுத்துள்ளோம்'' என்றார்.
இந்த நிலையில்தான் டக்ளஸ் தேவானந்தா, 'தமிழகத்தில் தன் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரிக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவரின் அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இந்திய பொலிஸ் என்ன செய்யப் போகிறது?