பக்கங்கள்

பக்கங்கள்

22 செப்., 2012


பொங்கு தமிழ் நிகழ்வையொட்​டி ஜெனீவா நவநீதம்பிள்​ளையின் அலுவலக உயரதிகாரிக​ளிடம், தமிழர் பிரதிநிதிகள் மனு கையளிப்பு
இன்று நடைபெறவிருக்கும் "எமது நிலம் எமக்கு வேண்டும் " மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வையொட்டி நேற்று ஜெனீவா ஐக்கிய நாட்டு சபை மனிதவுரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின்  காரியாலயத்தில் உயரதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் பிரதிநிதிகளால் பின்வரும் ஐந்து கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.
1. பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 ல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ் மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை  இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.
3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.
4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அத்துடன் இச் சந்திப்பில் தமிழ் மக்கள் தமது விடுதலைக்காக தொடர்ந்து மக்கள் மையப்படுத்தப்பட்ட வெகுசன கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்தவேண்டும் மற்றும் மனிதவுரிமை அமர்வுகள் நடைபெறும் காலங்களில் மக்கள் பலத்துடன் தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் வகையில் அனைத்துலக சமூகத்தை நோக்கி நீதிக்கான நிகழ்வுகளை நடாத்துவது வரவேற்கத்தக்கது எனவும் கூறப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற உரையாடலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள அரசால் இனவழிப்பில் சிக்கித்தவிக்கும் தமிழ் மக்கள் தாயகத்தில் எதிர்கொள்ளும் இன்றைய நிலைமையை விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. முக்கியமாக சிங்கள அரசு இன்று பாரம்பரிய தமிழர் நிலத்தை அபகரிப்பதை மற்றும் சிங்கள மயமாக்கல், தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்ச்சியாக மேற்கொள்ளுவதை சுட்டிக்காட்டி பேசப்பட்டது.
'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்."
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.