பக்கங்கள்

பக்கங்கள்

14 அக்., 2012


வேலூர் சிறையில் இருந்து வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை: மு.க.ஸ்டாலின் வரவேற்பு
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை செய்யப்பட்டார். அவரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் வரவேற்றனர். 


சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள வீடுகள் எரிக்கப்பட்ட வழக்கில் சேலம் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் 4-6-2012-ல் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது 5-க்கும் அதிகமான வழக்குகள் இருப்பதால் 18-6-2012-ல் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.


குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி லீலாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் கே.என். பாட்சா, என். பால்வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கு 12.10.2012 வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்காக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ள காரணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. குண்டர் தடுப்புச் சட்டத்துக்கும் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

குற்றச்சாட்டுகளைப் படித்து பதிலளிப்பதற்கு வசதியாக, கைது செய்யப்பட்ட 5 நாள்களுக்குள் அதற்கான ஆவணங்களை அவர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் உரிய காலத்தில் ஆவணங்கள் வழங்கப்படவில்லை.

இந்த வழக்கில் ஆவணங்களை சரிவர ஆராயாமல் அவசர அவசரமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிகிறது. வீரபாண்டி ஆறுமுகம், கௌசிக பூபதி, பாரப்பட்டி சுரேஷ்குமார் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே, அவர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து இன்று (13.10.2012) காலை வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை செய்யப்பட்டார். அவரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்பி மற்றும திமுகவினர் வரவேற்றனர்.