பக்கங்கள்

பக்கங்கள்

7 அக்., 2012


தமிழ் தேசிய கூட்டமைப்பு - இலங்கை அரசு பேச்சுக்கு இந்தியா உத்தரவாதமளிக்கும்!
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் இருதரப்புப் பேச்சுக்களை  இலங்கை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சமநேரத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறுவது என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டுடன் இந்தப் பேச்சுக்களை இலங்கை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.
இதுதொடர்பாக அண்மையில் புதுடெல்லி சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் விரிவாக ஆராய்ந்துள்ளார்.
நேற்று புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பேர்கொண்ட குழுவுக்கு மகிந்த ராஜபக்ச - மன்மோகன் சிங் சந்திப்பு தொடர்பாக, இந்தியா விளக்கமளிக்கவுள்ளது.
புதுடெல்லி சென்றுள்ள குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதன்போது இருதரப்பு பேச்சுக்கள் மற்றும் தெரிவுக்குழுவில் சமநேரத்தில் பங்கேற்பதை இந்தியா உத்தரவாதப்படுத்தவுள்ளது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், புதுடெல்லியில் முக்கியமாக இந்திய மத்திய அமைச்சர்கள் நாராயணசாமி, எஸ்.எம்.கிருஸ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதுடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்திக்கவுள்ளனர்.