பக்கங்கள்

பக்கங்கள்

12 நவ., 2012

அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கும் திட்டத்திற்கு ரணில் விமல் இணக்கம்
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்கும் திட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல்வீரவங்ச தலைமையிலான குழுவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
தலைமையிலான ஐ. தே க குழுவுக்குமிடையில் நேற்று விஷேட பேச்சு வார்த்தையொன்று இடம்பெற்றது. 
பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இவ்விஷேட சந்திப்பின் போது 13 ஆவது திருத்தச் சட்டம் உள்ளடங்கலாக முழு அரசியலமைப்புச் சட்டத்தையும் மாற்றியமைப்பது தொடர்பில் பேச்சுக்களை நடத்தி தீர்மானிப்பது என்றும் இங்கு இணக்கம் காணப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் விமல் வீரவங்ச ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த விஷேட சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் எம். பி க்களான காமினி ஜயவிக்கிரம பெரேரா, ஜோசப் மைக்கள் பெரேரா, ரவி கருணாநாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க லக்ஷமன் கிரியெல்ல மற்றும் அகில விரஜ் காரியவசம் ஆகியோரும் தேசிய சுதந்திர முன்னணி சார்பில் அதன் தலைவர் அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையில் முன்னாள் எம். பி க்களான பியசிறி விஜேநாயக்க மற்றும் முஸம்மில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது 13 ஆவது திருத்தம் மற்றும் நிறைவேற்று அதிகார முறைமை ஆகியவற்றை இல்லாதொழித்தல் மற்றும் அரசியலமைப்பு முறைமையை முற்றாக மாற்றியமைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக பேச்சு வார்த்தைகளை முன்னேடுப்பது என்றும் நேற்றை விஷேட பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ரணில்

இந்த சந்திப்பு தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித்தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கூறுகையில்

தேசிய சுதந்திர முன்னணிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையில் இன்று விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன. விஷேடமாக நாட்டின் அரசியலமைப்பினை மாற்றியமைப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இதனை முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனத்தின் பின்னர் இரு தரப்பும் பேச்சு>வார்த்தைகளை நடந்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 13 ஆவது திருத்தம் தொடர்பிலும் நிறைவேற்று அதிகாரம் தொடர்பிலும் இங்கு பேச்சுக்கள் இடம்பெற்றன.

விமல் வீரவங்க

இது தொடர்பில் அமைச்சர் விமல் வீரவங்க கூறுகையில்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் என்பது இந்தியா தனது தனிப்பட்ட தேவைக்கென்ற இலங்கை மீது திணிக்கப்பட்ட ஒன்றாகும். இதனை அன்று நாம் விரும்பியோ விரும்பாமலோ அதனை நாம் அன்று ஏற்றுக் கொண்டுள்ளோம்.

13 ஆவது திருத்தம் என்பது எமது நாட்டுக்கும் அவசியமில்லை இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியை தெளிவுபடுத்துவதற்கும் இந்த நோக்கத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைத்து செயற்படவேண்டியதன் அவசியம் குறித்தும் பேசுவதற்காகவுமே நாம் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் குழுவை சந்தித்தோம்

இதன்போது எமது சார்பிலான நிலைப்பாட்டினை எதிர்க்கட்சித் தலைவருக்கு தெளிவுபடுத்தினோம்.

எமது கருத்துக்களுக்கு செவிமடுத்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறுகையில்

13 ஆவது திருத்தம் மட்டுமல்ல நிறைவேற்று அதிகாரமும் அத்துடன் அரசியலமைப்பையும் கூட முழுமையாக மாற்றியக்க வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்தார்.

மேலும் அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படுகின்ற பட்சத்தில் அது பாராளுமன்றத்திற்கு இருக்கின்ற அதிகாரங்களையும் பலவீனப்படுத்தாத வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட வேண்டும் என்பது தொடர்பிலும் விரிவாக பேசப்பட்டது.

எப்படி இருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனத்திற்கும் பின்னர் இது தொடர்பில் இரு கட்சிகளும் கலந்து தொடர்ச்சியாக பேச்சு வார்த்தைகளை முன்னெடுப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என்றார்.