பக்கங்கள்

பக்கங்கள்

29 நவ., 2012


1983 முதல் 2012 ஜுன் வரை 98 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக சுரேஷ் எம்.பி. தகவல்

1983 ஆம் ஆண்டு முதல் 2012 ஜுன் 29 ஆம் திகதி வரையில் 98 தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் கொல்லப்பட்டுள்ளனர். யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்களை எட்டுகின்ற நிலையில் இதுவரையிலும் விடுவிக்கப்படாத 810 தமிழ் அரசியல் கைதிகள் நாட்டில் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 
 

 
இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய இயலாவிட்டாலும் பிணையில் விடுவிப்பதற்காவது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று சபையில் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
 
1983 ஆம் ஆண்டு முதல் 2012 ஜுன் 29 ஆம் திகதி வரையில் 98 தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் கொல்லப்பட்டுள்ள அதேவேளை 174 பேர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, நலனோம்புகை ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. இதனைத் தெரிவித்தார்.