பக்கங்கள்

பக்கங்கள்

23 நவ., 2012

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: புஜாரா மீண்டும் சதம்
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் காம்பீர் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதனால் அடுத்து வந்த வீரர்கள் நிதானமாக ரன் சேர்த்தனர். தனது 100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சேவாக் 30 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதேபோல் சச்சின் (8 ரன்), கோலி (19 ரன்), யுவராஜ் (0), டோனி (29 ரன்) ஆகியோரும் களத்தில் நீடிக்கவில்லை.
 
அதேசமயம் 3-வது வீரராக களமிறங்கிய புஜாரா சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். நிதானமாக, அதேசமயத்தில் அடிக்க வேண்டிய பந்தை அடித்த அவர், 81-வது ஓவரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் பவுண்டரி அடித்து சதம் கடந்தார். 248 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் அவர் இந்த இலக்கை எட்டினார். ஏற்கனவே, அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போதும் புஜாரா 206 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய டெஸ்ட் அணிக்கு தூணாக இருந்த ராகுல் டிராவிட் 3-வது வீரராக களமிறங்கி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவர் ஓய்வு பெற்றபிறகு அந்த இடத்தில் நிரந்தர வீரராக இடம்பெறும் வீரர் அடையாளம் காணப்படாமல் இருந்தது. தற்போது அந்த இடத்திற்கு புஜாரா பொருத்தமானவர் என்பதை நிரூபித்திருக்கிறார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.