பக்கங்கள்

பக்கங்கள்

19 நவ., 2012


இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 521 ஓட்டங்கள் குவித்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்களில் சுருண்டு பாலோ ஆன் பெற்றது.
2வது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 340 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
அணித்தலைவரும், தொடக்க வீரருமான அலிஸ்டயர் குக் சிறப்பாக விளையாடி சதம் கடந்து 168 ஓட்டங்களுடனும், பிரையர் 84 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்றைய 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினார்கள்.
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இந்த ஜோடியை ஒருவழியாக ஒஜா பிரித்தார். பிரையர் சதத்தை தவறவிட்டார். அவர் 11 பவுண்டரியுடன் 91 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அப்போது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 356 ஆக இருந்தது. 6வது விக்கெட் ஜோடி 157 ஓட்டங்கள் எடுத்தது. அவர் ஆட்டம் இழந்த சிறிது நேரத்தில் குக்கும் 176 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 406 ஓட்டங்கள் எடுத்தது.
இதனையடுத்து 77 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இலக்கை அடைந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடக்க வீரராக களமிறங்கிய வீரேந்திர ஷேவாக் 25 ஓட்டங்கள் எடுத்தார். ஆட்டமிழக்காமல் புஜாரா 41 ஓட்டங்களும், வீராட் கோஹ்லி 11 ஓட்டங்களும் எடுத்தனர்.