பக்கங்கள்

பக்கங்கள்

13 நவ., 2012


ஈழத் தமிழர் பிரச்சினையில் செயல்பட்டால்தான் அரசுக்கு ஆதரவு : கருணாநிதி

BBC TAMIL
ஈழத் தமிழர் பிரச்சினையில் பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா போன்ற பன்னாட்டு அமைப்புக்களை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

ஈழத் தமிழர் எதிர்காலம் குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்தியா ஆதரவு திரட்டினால்தான், இந்தியாவில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குத் திமுக தொடர்ந்து ஆதரவு அளிக்க முடியும் என அவர் எச்சரித்திருக்கிறார்.

திமுகவால் உருவாக்கப்பட்ட Tamil Eelam Supporters Organisation (TESO) என்றறியப்படும் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு அண்மையில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினை சென்னையில் நடத்தியிருந்தது.
மேற்கு வங்க மாநிலக் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில் நாடாளுமன்றத்தில், 18 உறுப்பினர்களைக் கொண்ட திமுகவின் ஆதரவு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அவசியம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஐ.நா. மன்றத்திடமும் மனித உரிமை ஆணையத்திடமும் கையளித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு டெசோ அமைப்பின் சார்பில் பாராட்டு கூட்டம் ஞாயிறன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிப் பேசுகையில், கருணாநிதி பொது வாக்கெடுப்பு நடத்தி இலங்கை தமிழர்களை சுதந்திரமாக சுயமரியாதையோடு வாழ வைக்க முடியும் என்றும், அந்த வழியை பெறுவதற்கு எடுக்கின்ற முடிவுகளை நிறைவேற்ற எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டுமோ அவ்வளவு அழுத்தம் கொடுக்க திமுகவும் டெசோ இயக்க தலைவர்களும் தயாராக இருப்பதாகவும் கருணாநிதி கூறினார்.
மேலும் பொது வாக்கெடுப்பின் வழியே மிகச் சிறிய நாடுகள் கூட விடுதலை பெற்றிருக்கும் நிலையில், ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஐ.நா. மன்றத்தை தயார்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அத்தகைய அழுத்தத்தினை மத்திய அரசே தரவேண்டும்,அவ்வாறு ஈழத் தமிழர்களுக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தால்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்கு திமுகவால் துணை நிற்கமுடியும் என்று கருணாநிதி எச்சரித்துள்ளார்.