பக்கங்கள்

பக்கங்கள்

5 நவ., 2012

ஜெனிவாவில் இலங்கையை கலங்க வைத்த அமெரிக்கா; இந்தியா, கனடா, ஜேர்மன் நாடுகளும் கேள்விக் கணைகள்
உலக நாடுகள் ஒவ்வொன்றும் நேரடியாகவே இராஜதந்திரச் சமரில் ஈடுபடும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தொடரில்  இலங்கை மீது அமெரிக்கா, இந்தியா, கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகள் நான்கு திசைகளிலிருந்தும் கூட்டாக
இணைந்து கடும் தாக்குதல் நடத்தியதால் நேற்றைய ஜெனிவா தொடர் அரசுக்கு அக்கினிப்பரீட்சையாக அமைந்தது.
 
குறிப்பாக பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை விவகாரம், 13 ஆவது அரசமைப்புத் திருத்த விடயம், வடமாகாண சபைத் தேர்தல், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்களைக் கையிலெடுத்தே மேற்படி நாடுகள் இலங்கை மீது கேள்விக் கணைகளை ஏவின.
 
அத்துடன், கடுமையான சொற்போரை சமாளிப்பதற்குஇலங்கை அரசதரப்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டதால் நேற்றைய ஜெனிவாத் தொடர் போர்க்களம்போல் காட்சியளித்தது.
 
அதேவேளை, பிரதம நீதியரசருக்கு எதிராக இலங்கையில் கொண்டுவரப்பட்டுள்ள குற்றப்பிரேரணை குறித்து நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தில் அமெரிக்க கடும் கண்டனத்தை வெளியிட்டது.
 
நேற்றைய மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெனிவாவுக்கான அமெரிக்கப் தூதுவர் ,பிரதம நீதியரசருக்கெதிராக கொண்டு வந்திருக்கும் குற்றப்பிரேரணை மூலம் ,இலங்கை அரசு நீதித்துறையில் தலையிட்டுள்ளதென்றும் குற்றம்சாட்டியது.
 
இலங்கையின் மீள்குடியேற்றம் ,கட்டமைப்புப் பணிகள் குறித்து அமெரிக்க கடும் கவலை கொண்டிருப்பதாகவும், அளிக்கப்பட வாக்குறுதிகளையும் பொறுப்புக் கூறும் கடப்பாட்டையும் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டுமென்றும் அமெரிக்க தூதுவர் மேலும் குறிப்பிட்டார்.
 
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் அமுலாக்கம்,வடக்கு கிழக்கில் படைக் குறைப்பு,தேசியப் பிரச்சினைக்கான அதிகாரப் பகிர்வு தீர்வு,துணை ஆயுதக்குழுக்களின் ஆயுதக் களைவு ஆகிய விடயங்களை உடனடியாக இலங்கை அரசு செய்ய வேண்டுமென்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என்று குறிப்பிட்ட அமெரிக்கத் தூதுவர்,கருத்துச் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்று சுட்டிக்காட்டினார்.
 
பிரதம நீதியரசருக்கெதிராக கொண்டுவரப்பட்டுள்ள குற்றப்பிரேரணை குறித்து அமெரிக்க கடும் அதிருப்தியை வெளியிடுவதாக குறிப்பிட்ட அமெரிக்கத் தூதுவர்,இது அரசு அப்பட்டமாக நீதித்துறையில் தலையிடுவதையே காட்டுகின்றதென குறிப்பிட்டார்.
 
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட கனடாவுக்கான ஜெனீவாத் தூதுவர் ,இலங்கையின் மனித உரிமைகள் மேம்படுத்தல் விடயத்தில் கனடா மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாகவும், இலங்கையின் வட மாகாணத்தில் உடனடியாக தேர்தல் ஒன்றை நடத்தி மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியது இலங்கையின் கடமை என்றும் தெரிவித்தார்.
 
நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட ஜெனீவாவில் உள்ள இந்தியாவுக்கானத் தூதுவர், பதின்மூன்றாம் திருத்தத்தின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை கொண்டு வர இலங்கை அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பது இந்தியாவின் விருப்பென்று குறிப்பிட்டார்.
 
மீள்குடியேற்றம், முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு, நல்லிணக்க ஆணைக்குழுவின் அமுலாக்கம்,மனித உரிமைகளின் மேம்பாடு குறித்து இந்தியா ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக குறிப்பிட்ட இந்திய தூதுவர்,வடமாகாணத் தேர்தலை 2013 ஆம் ஆண்டுக்குள் இலங்கை நடத்துமென்று இந்தியா எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டார்.
 
மனித உரிமைகள் அமுலாக்கம் தொடர்பில் இலங்கை அரசு ஏற்கனவே அளித்துள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றுமென்று இந்தியா நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதற்கிடையில் இங்கு கருத்து வெளியிட்ட ஜேர்மன் தூதுவர்,பிரதம நீதியரசருக்கேதிரான குற்றப்பிரேரணை குறித்து ஜேர்மன் அரசு கவலை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
 
மீளாய்வுக் கூட்டத்தின் இடைநடுவே கருத்து வெளியிட்ட அமைச்சர் சமரசிங்க ,பிரதம நீதியரசர் ஒருவருக்கு எதிராக பிரேரணை ஒன்றை கொண்டுவர இலங்கை அரசியலமைப்பில் விசேட ஏற்பாடுகள் இருப்பதாகவும். அதன்படி பல ஆதாரங்களுடன் அவர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நூற்றி பதினெட்டு பேர் கையொப்பமிட்டு பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.