பக்கங்கள்

பக்கங்கள்

23 நவ., 2012

இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் : ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்
விஸ்வரூபம் திரைப்படம் இலங்கையில் எங்கும் திரையிடக் கூடாது. மீறி திரையிட்டால் குறிப்பிட்ட திரையரங்குகளை முற்றுகையிட்டு மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுப்போமென ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
 
அச் செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
கமல்ஹாஸனின் நடிப்பில் வெளிவரவிருக்கும் விஸ்வரூபம் திரைப்படம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரிப்பதாகவும், இஸ்லாமியர்கள் பற்றிய தவறான எண்ணங்களை மக்கள் மத்தியில் விதைப்பதாகவும் எமக்கு செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில், திரைப்படத்தின் விளம்பர காட்சி அமைப்புகள் கூட அரபி எழுத்தணி வடிவில் தான் அமைந்துள்ளன. இது ஒரு சமுதாயத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் செயலாகும். இதேபோல் தொடர்ச்சியாக முஸ்லிம்கள் தொடர்பாக தவறான எண்ணங்களை சினிமாக்களினூடாக பரப்புவதை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
இதேவேளை, அகிம்சையையும், நல்லொழுக்கத்தையும் போதிக்கும் தூய்மையான மார்க்கத்தை சினிமாவின் மூலம் கொச்சைப்படுத்துவதை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. எனவே இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளிலும் ஜமாத் தொடர்ந்து ஈடுபடுமென அச் செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.