பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2012

நாட்டில் விபசாரத்தை அனுமதிப்பதா? உலமா கட்சி கடும் கண்டனம்
நாட்டில் விபசாரத்துக்கு அனுமதியளிப்பதன் மூலமே சுற்றுலாத்துறையை வளர்க்க முடியும் என்ற முஸ்லிம் பெண் ஊடகவியலாளரின் கருத்து மிகவும் கண்டிப்புக்குரியதாக இருப்பதுடன் இக்கருத்தை அவர் வாபஸ் பெறுவதற்கான அழுத்தங்களை ஜம்இய்யத்துல் உலமா மேற்கொள்ள வேண்டும்
என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பாலியல் தொழிலை இலங்கையில் சட்டபூர்வமாக்குவது நல்ல விடயமாகும் என சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியும் எழுத்தாளருமான ஏறாவூரைச் சேர்ந்த ஸர்மிளா செய்யித் பி.பி.சி.தமிழோசைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது பற்றி உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளதாவது,

இத்தகைய கருத்தை ஒரு முஸ்லிம் பெண் கூறியிருப்பது மிகவும் கவலை தருவதுடன் அவர் தனது சமூகம், தனது நாடு, கலாசாரம், பண்பாடு என்பவற்றை கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல் சொல்லியுள்ளதாகவே தெரிகிறது.

விபசாரத்தை அனுமதித்துள்ள நாடுகளில் பொருளாதார வளத்தை விட கலாசார சீர்கேடே அதிகரித்துள்ளதை காணலாம். இதற்கு உதாரணமாக இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளைக்காணலாம்.

இவ்வாறான கருத்துக்களை சொல்பவர் நிச்சயம் ஒரு மனநோயாளியாகவே இருக்க முடியும். சமூகத்தையும், நாட்டையும் சீரழித்து அதனை பார்த்து ரசிக்கும் மனங்கொண்டவர்களே இவ்வாறான கருத்துக்களை கூறுவர்.

தனது தாய் நாட்டின் பொருளாதார வளத்துக்காக விபசாரத்தை அனுமதிக்க வேண்டும் என்று ஒருவர் கூறுவது தனது சொந்த வசதி வாய்ப்புக்காக தனது தாயையே விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்கு ஒப்பானதாகும்.

இக்கருத்தைக் கூறிய பெண் ஒரு முஸ்லிம் வாரப்பத்திரிகையில் கடமையாற்றுவதுடன் முஸ்லிம் கட்சித்தலைவர் ஒருவரின் அமைச்சில் பணிபுரிவதாகவும் அறிகிறோம். தஸ்லிமா நஸ்ரின் போன்றோரின் வரிசையில் இவரும் ஆகிவிட துடிப்பதாகவே தெரிகிறது.

ஆகவே மேற்படி பெண் ஊடகவியலாளரின் கருத்தை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதோடு இவருக்கு எதிராக உலமா சபை நடவடிக்கை எடுத்துமேற்படி கருத்தை அவர் வாபஸ் வாங்க அல்லது அதற்காக மன்னிப்புக்கேட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.