பக்கங்கள்

பக்கங்கள்

28 நவ., 2012


ஈழ மண்ணின் மறவர்களுக்கு கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக மக்கள் அஞ்சலி
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் தின நிகழ்வுகள் மிகச் சிறப்பாக ஒழங்கமைக்கப்பட்டு உணர்வு பூர்வமாக உறவுகளாலும் மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
2009ல் விடுதலைப் போராட்டத்தை அழித்து தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரச படைகள் தாயகத்துப் பெற்றோர்களின் பிள்ளைகளின் கல்லறைகளை இடித்து துவம்சம் செய்தனர்.
ஒவ்வொரு தமிழர்களினதும் பெற்றோர்களினதும் நெஞ்சைப் பிழிந்த இச்செயல் எமது மக்களின் மனங்களில் ஆறாத பெரும் காயமாகத் தொடர்ந்து வருகிறது.
மரணித்தவர்களைக்கூட மன்னிக்கத் தெரியாத அரசு தொடர்ந்தும் தாயகத்தில் சகலதுறைகளிலும் பரிபூரமான ஆக்கிரமிப்பைக் கொண்டுள்ள இவ்வேளை, தமது பிள்ளைகளை நெஞ்சறைகளில் நினைவேந்தி வீட்டறைகளில் சுடரேற்றி கண்ணீர் விட்டு கதறி அழுது தங்கள் ஆற்றாமையை தீர்த்துக் கொண்டனர்.
குறிப்பாக கிளிநொச்சியிலும் பிரமந்தனாறு, அக்கராயன், விசுவமடுப் பகுதியிலும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் மாலை 6.07 மணிக்கு மாவீரர்களுக்கு சுடரேற்றி கார்த்திகைப்பூ மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தினர்.
பொதுவாக அனைத்து மக்களும் தங்களுடைய வீடுகளில் தங்களது பிள்ளைகளினதும், உறவுகளினதும், பெற்றோர்களதும் துணைவன் துணைவியரதும், தோழர் தோழியர்களினதும் திருவுருவப்படங்களுக்கு விளக்கேற்றி அஞ்சலித்து ஆறுதல் அடைந்தனர்.
இதேவேளை மாவீரர் தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இராணுவம் தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டே உள்ளது.