பக்கங்கள்

பக்கங்கள்

14 நவ., 2012

பிராந்தியில் விஷம் கலந்து கணவரை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது கள்ளிப்பட்டு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் முத்து (வயது 48). இவரது மனைவி சுலோச்சனா (39). இவர்களுக்கு 3 மகள், 1 மகன் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்தவர் முத்துசாமி (49). மனைவியை இழந்தவர். சுலோச்சனாவுக்கும், முத்துசாமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இது கணவர் முத்துக்கு தெரிந்தது. இதனால் சுலோசனாவை கண்டித்து வந்தார். ஆனாலும்
கள்ளத்தொடர்பு நீடித்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் முத்து மது பாட்டில் வாங்கி வந்தார். அதில் சிறிது குடித்துவிட்டு பாட்டிலை வீட்டில் வைத்திருந்தார். பின்னர் இரவு தனது நண்பர் ஆழ்வார் (45) என்பவரை வீட்டுக்கு அழைத்து வந்தார். இருவரும் வீட்டிலிருந்த மதுவை குடித்தார்கள். சிறிது நேரத்தில் முத்து, ஆழ்வார் இருவருக்கும் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. ஆழ்வார் மயங்கி விழுந்தார். முத்துவும் வலியால் துடித்தார். சிறிது நேரத்தில் வீட்டிலேயே மயங்கி விழுந்து முத்து உயிரிழந்தார்.
ஆபத்தான நிலையில் இருந்த ஆழ்வாரை கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுதொடர்பாக முத்துவின் அண்ணன் துரைசாமி சங்கராபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதில் எனது தம்பியை அவரது மனைவி சுலோச்சனாவே பிராந்தியில் விஷம் வைத்து கொலை செய்துவிட்டார் என்று கூறியிருந்தார். இதையடுத்து சுலோசனா, அவரது கள்ளக்காதலன் முத்துசாமி இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் கணவரை விஷம் கலந்து கொன்றதை சுலோச்சனா ஒத்துக்கொண்டார்.
கள்ளக்காதலன் கொடுத்த யோசனையின் பேரில் மதுவில் விஷத்தை கலந்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து சுலோச்சனா, முத்துசாமி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.