பக்கங்கள்

பக்கங்கள்

21 டிச., 2012


வெள்ளத்தில் மிதக்கிறது மட்டக்களப்பு ; உயிரிழப்பு 22ஆக உயர்வு

நாட்டில் கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து பெய்துவரும் அடை மழையால் வெள்ளம், மண்சரிவு, மரம் முறிவு ஆகியவற்றில் சிக்கி நேற்று மாலை வரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். 20 இற்கு மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர். 50 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
 
அடை மழை காரணமாக நாடு முழுவதிலும் 45 ஆயிரத்து 916 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 75 ஆயிரத்து 558 பேர் நிர்க்கதியாகியுள்ளனர் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
 
இவர்களில் 3 ஆயிரத்து 394 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 696 பேர் 47 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, வெள்ளம், மண்சரிவு, மரம் முறிவு என்பவற்றால் 146 வீடுகள் முழுமையாகவும் 805 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
 
அதிக சேதம் மட்டக்களப்புக்கு;
அதிக சாவு மாத்தளைக்கு
 
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் அதிக        பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதோடு மாத்தளை மாவட்டத்தில் அதிக மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில்தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் படுவான்கரை மட்டக்களப்பு நகருக்கான அனைத்துப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. 
 
படுவான்கரையில் உள்ள கிராமங்களுக்கிடையிலான தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. படுவாங்கரை, மட்டக்களப்பு நகர் என்பவற்றிற்கான போக்குவரத்து இயந்திரப் படகுச்சேவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 
கிராமங்களுக்கிடையிலான போக்குவரத்திற்குத் தோணிகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
 
ஜி.சீ.ஈ. (சா/த) பரீட்சைக்கான வினாத்தாள்கள் கொண்டு செல்வதற்கும், பரீட்சை கடமைக்கான ஆசிரியர்களை ஏற்றுவதற்கும் இயந்திரப் படகுச்சேவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 
மட்டக்களப்பிலிருந்து போக்குவரத்தை மேற்கொள்வதற்காக இருந்த ஒரேயொரு பணிச்சங்கேணி பாலம் நேற்று சேதமடைந்துள்ளதால் மட்டக்களப்புக்கும் கொழும்புக்குமிடையிலான போக்குவரத்தும் அவ்வீதியினுடனான போக்குவரத்தும் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
 
காலநிலை சீர்கேட்டால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் மாவட்ட அடிப்படையில் வருமாறு:
 
மட்டக்களப்பு மாவட்டம்
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 34,753 குடும்பங்களைச் சேர்ந்த 135,646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இருவர்  காணாமற்போயுள்ளனர்.
 
சூழல் காற்று காரணமாக 115 வீடுகள் முழுமையாகவும் 607 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. நிர்க்கதியான 556 குடும்பங்களைச் சேர்ந்த 2,169 பேர் 7 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
 
அம்பாறை மாவட்டம்
 
சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் பலர் பாதிப்படைந்துள்ளனர். பலர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இங்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
திருகோணமலை மாவட்டம்
 
திருகோணமலை மாவட்டத்திலும் மக்கள் பாதிப்படைந்து இடம்பெயர்ந்துள்ளனர். இங்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
மாத்தளை மாவட்டம்
 
மாத்தளை மாவட்டத்தில் 952 குடும்பங்களைச் சேர்ந்த 2,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாத்தளையில் அதிகூடியளவில் 8 இறப்புகள் பதிவாகியுள்ளன. 13 பேர் காயமடைந்துள்ளனர்., 10இற்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். 32 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. 
 
அதேவேளை, 82 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. 628 குடும்பங்களைச் சேர்ந்த 1,583 பேர் 15 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
 
கண்டி மாவட்டம்
 
கண்டி மாவட்டத்தில் இதுவரை 101 குடும்பங்களைச் சேர்ந்த 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நால்வர் உயிரிழந்துள்ளனர். 10 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 5 வீடுகள் முழுமையாகவும் 44 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. இடம்பெயர்ந்த 35 குடும்பங்களைச் சேர்ந்த 160 பேர் 3 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
 
நுவரெலியா மாவட்டம்
 
நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 138 குடும்பங்களைச் சேர்ந்த 561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 33 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. இடம் பெயர்ந்த 19 குடும்பங்களைச் சேர்ந்த 123 பேர் 3 தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
 
பொலன்னறுவை மாவட்டம்
 
பொலன்னறுவை மாவட்டத்தில் 2,271 குடும்பங்களைச் சேர்ந்த 5,967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 20 இற்கு மேற்பட்டோர்  காயமடைந்துள்ளனர். 30 வீடுகள் முழுமையாகவும் 147 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. 2,135 குடும்பங்களைச் சேர்ந்த 5,582 பேர் 17 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
 
பதுளை மாவட்டம்
 
பதுளை மாவட்டத்தில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவர் உயிரிழந்துள்ளனர். 5 வீடுகள் முழுமையாகவும் 4 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 15 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர் ஒரு தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
 
அம்பாந்தோட்டை மாவட்டம்
 
இங்கு 3,283 குடும்பங்களைச் சேர்ந்த 13,211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் காணாமல் போயுள்ளனர்.
 
மொனராகலை மாவட்டம்
 
மொனராகலை மாவட்டத்தில் 86 குடும்பங்களைச் சேர்ந்த 306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் ஒரு தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
 
குருநாகல் மாவட்டம்:
 
குருநாகல் மாவட்டத்தில் 3,558 குடும்பங்களைச் சேர்ந்த 12,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
புத்தளம் மாவட்டம்
 
புத்தளம் மாவட்டத்தில்  706 குடும்பங்களைச் சேர்ந்த 3,286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
 
கொழும்பு புத்தளம்
போக்குவரத்து தடை
 
இதேவேளை, புத்தளம் கொழும்பு வீதியின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு சிலாபம்  புத்தளம் வீதி மூடப்பட்டுள்ளது. இதனால் மாற்று வழியூடாகப் போக்குவரத்து இடம்பெறுகின்றது.
 
நீரில் மூழ்கியது சிலாபம் நகர்
 
புத்தளம் மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக சிலாபம் நகரம் நீரில் மூழ்கியுள்ளது. சிலாபம் பஸ் தரிப்பிடம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. முன்னேஸ்வரம் குளத்தின் அணைக்கட்டை உடைத்து நீரை வெளியேற்ற இராணுவத்தினரும், பொலிஸாரும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
சிலாபம் நகரிலிருந்து உள் செல்லவோ வெளியேறவோ முடியாத நிலை காணப்படுகின்றது.
 
ஐந்து மீனவர்களைக்  காணவில்லை
 
இதேவேளை, மீன்பிடிப்பதற்காகக் கடந்த 16ஆம் திகதி இரவு கடலுக்குச் சென்ற மீனவர்கள் ஐவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
பங்கதெனியாவைச் சேர்ந்த மூன்று மீனவர்களும் சுதுவெல்ல பகுதியைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர் என்று சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
 
காணாமல்போன மீனவர்களின் உறவினர்கள் செய்த முறைப்பாடு தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
 
தொற்றுநோய்கள் பரவும் ஆபத்து
 
இதேவேளை, நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தொற்றுநோய்கள் பரவக்கூடும். எனவே, மக்கள் மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.