பக்கங்கள்

பக்கங்கள்

1 டிச., 2012

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் இன்று காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
இவர் கடந்த 1919ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி பஞ்சாப்பின் ஜீலம் பகுதியில் பிறந்தார்.

தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிய ஐ.கே.குஜ்ரால், கடந்த 1975ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக பணியாற்றினார்.
பின்னர் சோவியத் யூனியனுக்காக இந்திய தூதராக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து 1980ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஜனதா தளத்தில் இணைந்தார்.
1989ஆம் ஆண்டில் பஞ்சாப்பின் ஜலந்தர் எம்.பி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வி.பி.சிங் அமைச்சரவையில் வெளிவிவகாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதேபோன்று 1996ஆம் ஆண்டு தேவகவுடா அமைச்சரவையிலும் வெளிவிவகாரத்துறை அமைச்சரானார்.
அதன் பின்னர் ஐக்கிய முன்னணியின் தலைவராக ஐ.கே. குஜ்ரால் தெரிவு செய்யப்பட்டு 13 மாதங்கள் நாட்டின் 12-வது பிரதமராக பதவி வகித்தார்.
பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த குஜ்ராலுக்கு அண்மையில் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லியை அடுத்த குர்கானில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று மாலை 3.27 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.