பக்கங்கள்

பக்கங்கள்

21 டிச., 2012


தனது கணவர் ஏன் இறந்தார் என்பத குறித்து, பாடகி நித்யஸ்ரீயின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது போலீஸ். “கணவர் ஆற்றில் குதித்த விபரம் அறிந்தவுடன் நானும் அடையாறு பாலத்துக்கு ஓடிச் சென்றேன். அங்கே அப்போது அவரது உடல் கிடைத்திராத காரணத்தால், எப்படியும் அவர் உயிரோடு வருவார் என்று நம்பி…திரும்பி விட்டேன்” என்று அவர் தன் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 ஆனால், நித்யஸ்ரீ வீடு திரும்பியபின், அவரது கணவர் மகாதேவன் இறந்து விட்டதாக தகவல் வந்து சேர்ந்ததாக சொல்கிறது, அவரது வாக்குமூலம். “தன் தாயார் மீது அளவுக்கதிகமான பாசம் வைத்திருந்த மகாதேவன், அவர் இறந்ததைத் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்” என்பதே வாக்குமூலம்
அளித்துள்ள பாடகி நித்யஸ்ரீயின் ஊகம். பிரபல கர்நாடக மற்றும் சினிமா பின்னணி பாடகியான நித்யஸ்ரீ மகாதேவன், மார்கழி இசை விழாவில் பிஸியாக இருக்கும் நேரம் இது.
அந்த நேரத்தில், திடீரென்று அவரது கணவர் நேற்று அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையை தொடங்கிய போலீஸார், மகாதேவன் சென்ற காரை ஓட்டிச் சென்ற டிரைவர் சுரேஷின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். சுரேஷின் வாக்குமூலத்தின்படி மகாதேவன், காரில் சென்று கொண்டிருந்தபோது, யாருடனோ செல்போனில் பேசியபடி சென்றிருக்கிறார். கார் அடையாறு பாலத்தில் வந்தபோது மகாதேவன் குரலை உயர்த்தி யாருடனோ சண்டை போட்டுள்ளார்.
அந்த வேகத்தில் காரை ஓரங்கட்டி நிறுத்த சொல்லியுள்ளார். காருக்கு வெளியே நின்று பேசப்போகிறார் என்று நினைத்த டிரைவரும், காரை ஓரம்கட்டி நிறுத்தியுள்ளார். கீழே இறங்கிய மகாதேவன், காரை விட்டு அகன்று ஓரிரு அடிகள் வைத்தவர், மீண்டும் காரின் உள்ளே கையை நீட்டி கார் சாவியை பிடுங்கிக் கொண்டு பாலத்தை நோக்கி ஓட முயன்றிருக்கிறார். விபரீதம் உணர்ந்த டிரைவர் அவரை இழுத்துப் பிடிக்க முயன்றிருக்கிறார். அப்போது டிரைவரிடம் இருந்து திமிறி விடுபட்டுக் கொண்ட மகாதேவன், டிரைவரை கீழே தள்ளிவிட்டு, ஓடிப்போய் பாலத்தில் இருந்து குதித்ததாக உள்ளது.
அவர் யாருடன் போனில் பேசினார் என்று தெரியாது என்று கூறியுள்ளார் சுரேஷ். கணவன் தற்கொலை செய்துகொண்ட தகவல் தெரிந்ததும் நித்யஸ்ரீ, தாமும் தற்கொலை செய்ய முயன்றார் என்றும், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் நேற்று செய்திகள் வெளியாகின. தற்போது போலீஸ், நித்யஸ்ரீயிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளது. நித்யஸ்ரீ தனது வாக்குமூலத்தில், “எனது கணவர் மகாதேவன் பகல் 12 மணியளவில் காரை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினார். கார் பேட்டரியை மாற்றுவதற்கு செல்வதாகத்தான் சொல்லிவிட்டுச் சென்றார்.

அடுத்த 10 நிமிடத்துக்குள் அவர் ஆற்றில் குதித்துவிட்டார் என்ற செய்தியை டிரைவர் சுரேஷ், என்னிடம் சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை. நானும் கோட்டூர்புரம் பாலத்துக்கு ஓடிச் சென்றேன். அவரை, தீயணைப்பு வீரர்கள் தேடிக்கொண்டிருந்தனர். அதற்குமேல் என்னால் அங்கு நிற்கமுடியவில்லை. எப்படியும் அவர் உயிரோடு நல்லபடியாக வருவார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்று என்னால் சொல்ல முடியவில்லை.
எனது கணவர், அவரது தாயார் சாந்தா மீது அதிகமாக பாசம் வைத்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி எனது கணவரின் தாயார் சாந்தா இறந்து போனார். அந்த சோகம், எனது கணவரை மனதளவில் மிகவும் பாதித்துவிட்டது. எப்போதும் தாயாரை நினைத்தபடி மன உளைச்சலால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவருக்கு, டாக்டரிடம் சிகிச்சை அளித்து வந்தோம். தாயாரை பறிகொடுத்த சோகம்தான் அவரை இந்த முடிவுக்கு தள்ளிவிட்டது என்று நான் நினைக்கிறேன். மற்றபடி தனிப்பட்ட முறையில் அவருக்கும், எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை” என்று கூறியுள்ளார்.
இது பற்றி போலீஸ் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, தாம் இன்னமும் விசாரணையை முடித்து, கேஸை மூடிவில்லை என்றனர். மேலும் சிலரது வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படும் எனவும், அதன் பின்னரே தற்கொலைக்கான காரணம் என்ன என்பது முடிவு எடுக்கப்படும் எனவும் அவர்கள் கூறினர். சம்பவம் நடந்தபோது, அடையாறு பாலத்தில் சென்றுகொண்டிருந்த இருவர், ஏற்கனவே தமது வாக்குமூலங்களை போலீஸில் பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் தொடர்புடைய இடங்களில் இப்போது என்ன நடக்கிறது?
தற்கொலை செய்ய முயன்று தற்போது மருத்துவமனையில் உள்ள பாடகி நித்யஸ்ரீயின் கணவர், திடீரென பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், இசை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட மகாதேவன் கோட்டூர்புரத்தில் வெள்ளையன் தெருவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்றபின், உயிருடன் திரும்பவில்லை.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பாடகி நித்யஸ்ரீ, தற்போதும் மருத்துவமனையில் உள்ளார். இப்படியான நிலையில், இறந்த மகாதேவனுக்கு அஞ்சலி செலுத்தவும், நித்யஸ்ரீயின் நிலைமை எப்படியுள்ளது என தெரிந்துகொள்ளவும், அவர்களது நலம்விரும்பிகள் பலர், அவர்களது இல்லத்துக்கு முன் கூடியுள்ளார்கள். அந்த இடமே சோகமயமாக காட்சியளிக்கிறது.