பக்கங்கள்

பக்கங்கள்

12 டிச., 2012


கடும் காயங்களுடன் தடுப்பில் உள்ள மாணவர்கள்; இன்னும் சித்திரவதை செய்யவா வெலிக்கந்தைக்கு மாற்றியுள்ளீர்கள்? – ஜே.வி.பி. கேள்வி

பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரின் பிடியில் இருக்கும்  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும்  உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியுள்ள  ஜே.வி.பி., ஏகாதிபத்திய தலையீடுகளுக்கு வழிசமைக்கின்ற அரசின்
ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக அனைவரும் அணிதிரளவேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பில் ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:
கடந்த 26ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்  செயலாளர்  தர்ஷானந்தும்  அவருடன்  தற்போது தடுப்பில் உள்ள ஏனைய மாணவர் மூவரும்  பொலிஸ் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கடுமையாகத்  தாக்கப்பட்டு கடும் காயங்களிற்கு உள்ளாகியிருக்கின்றனர்  என அறிந்துள்ளோம்.
மொத்தமாக 12  மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டுள்ளார். 7 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர் ஒன்றியத்தின்  செயலாளர்  தர்ஷானந்தும், இன்னும் மூன்று மாணவரும் வவுனியாவில் இருந்து  வெலிக்கந்த தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அரசே! மாணவர்களை இன்னும் சித்திரவதை செய்யவா வெலிக்கந்தை  தடுப்பு முகாமுக்கு மாற்றியுள்ளீர்கள்?
பிரிவினைவாத போராட்டத்தின் காரணமாக பெருமளவு இன்னல்களை தாங்கியுள்ள இலங்கை சமூகம் இப்படியான சம்பவங்களால் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் திசையை நோக்கியதாக ஒருபோதும் நகரப்போவதில்லை. அது மேலும் பிரிவினையை நோக்கியதாகவே அமையும்.
அரச  படைகளால் யாழ்.  பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்படுவதையும் அவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள கடுமையான தாக்குதலையும் மிக வன்மையாகக்  கண்டிப்பதுடன், தடுப்பில் உள்ள ஏனைய மாணவர்களை உடன் விடுதலை செய்யுமாறும் அரசை வலியுறுத்துகின்றோம்.
ஜனநாயகத்திற்கு மாறாகவும் பழிவாங்கும் நோக்கத்துடன் அரசால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான தடுத்துவைத்தல், தாக்கப்படுதலானது பிரிவினையை வளர்ப்பதுடன் இலங்கைக்கு எதிராக ஏகாதிபத்தியவாதிகளின் தலையீட்டை அதிகரிக்கச் செய்யும் செயலாகவே  அமையும்.
மீண்டும் பிரிவினையை உயிர்ப்பிக்கின்ற அதேவேளை ஏகாதிபத்தியவாதிகளுக்கு சாதக நிலையை ஏற்படுத்துகின்ற அரசின் செயற்பாட்டை தோற்கடிப்பது எம் அனைவரினதும் கடமையாகும்.
ஏகாதிபத்தியச் செயற்பாடுகளுக்கு வழிசமைக்கின்ற அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அணிதிரளுமாறு இலங்கை வாழ் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். எந்த வடிவத்திலான பிரிவினைக்கும் இடமளிக்க வேண்டாமென தமிழ், சிங்கள, முஸ்லிம், பேர்கர், மலே ஆகியோரிடம் சகோதரத்துவத்துடன் கேட்டுக்கொள்கின்றோம் – என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத்.