பக்கங்கள்

பக்கங்கள்

31 டிச., 2012




            மாவீரர் தினம் கொண்டாடிய யாழ் பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து சித்ரவதை செய்து கொண்டி ருக்கிறது இலங்கை ராணுவம். 

நவம்பர் 27-ந்தேதி இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மாவீரர் நாள் வெகு விமரிசையாக நினைவு கூரப்பட்டது. எப்போதும் போல இந்த வருடமும் மாவீரர் நாள் நிகழ்வுகளை சிறப்பாக நடத்த திட்டமிட்டனர் யாழ் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள். ஆனால் அதனை அறிந்த ராஜபக்சே, "இலங்கையில் மாவீரர் நிகழ்வுகள் எங்கும் நடக்க கூடாது' என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவிடம் கட்டளையிட்டார். அமைச்சரும் இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்தச் சொல்லி தமிழர் தாயகப் பிர தேசத்தில் நிலைகொண்டிருக்கும் ராணுவ தளபதிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதே சமயம் யாழில் சுற்றுப்பயணம் செய்த ஹெக லியரம்புக்வெல, "மாவீரர் நாள் தினத்தை யாழ் பல்கலை மாணவர்கள் அனுஷ்டிக்கக்கூடாது. தீபங் களையும் ஏற்றக்கூடாது' என்று எச்சரித்தார். ஆட்டோக்களில் மைக் கட்டி இந்த எச்சரிக்கையை யாழ் முழுவதும் ஒலிபரப்பு செய்தனர் ராணுவத்தினர்.


ஆனால், இந்த எச்சரிக்கைக்கெல்லாம் பயப்படாத யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டப்படி வழக்கம் போல மாவீரர் நாள் நிகழ்வுகளை சிறப்பாக நடத்தினர். இதனால் ஆத் திரமடைந்த சிங்கள ராணுவம், மாணவ- மாணவிகளின் விடுதிகளில் நுழைந்து தாக் கியது. இதில் ராணுவத்திற்கும் மாணவர் களுக்குமிடையே மோதல்கள் வெடித்தன. இந்நிலையில், ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக 4 மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது சிங்கள ராணுவம். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதற்கிடையே, ""மாணவர்களின் கைதை கண்டித்தும் மாணவர்களை விடுதலை செய்யக்கோரியும் இலங்கையில் போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டம் ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளிலும் பரவி யது. ஆனால், எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை சிங்கள ராணுவம். மாறாக சிறையில் இருக்கும் மாணவர்களை புலிகள் என முத்திரைக் குத்தி அவர்களை சித்ரவதை செய்து வரு கிறார்கள். "புலிகள் என்பதை ஒப்புக்கொண் டால் டார்ச்சர் பண்ணமாட் டோம். ஒப்புக் கொள்ளாத வரையில் டார்ச் சர் நடக்கும்' என்று சிறைக் குள் சென்று அடிக்கடி மாணவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் சிங்கள ராணுவத்தினர்''’’என்பதாக இலங் கையிலிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையில், நான்கு மாணவர்களும் விடுதலை செய்யப்படாத வரை பல்கலைக் கழகத்திற்கு செல்லமாட்டோம் என பல்கலைக்கழகத்தை புறக்கணித்து வருகிறார்கள் ஒட்டுமொத்த மாண வர்களும். அதேபோல பல்கலைக்கழக துறைத் தலைவர்கள், பேராசிரியர் கள், பணியாளர்கள் அனைவரும் பல்கலைக்கழக நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தங்களின் எதிர்ப்புகளை காட்டி வருகின்றனர். மாணவர்களை விடுதலை செய்யுமாறு மகிந்த ராஜபக்சேவிடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் முறையிட்டனர். ஆனால், இது வரையிலும் அதனை அலட்சியப்படுத்தியே வருகிறார் ராஜபக்சே.

சுமார் ஒரு மாதமாக இப்பிரச்சினை நீடித்து வரும் நிலையில், பலாலி ராணுவத் தலைமையகத்தில் இருந்த யாழ் ராணுவ கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கேவை கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் சமீபத்தில் சந்தித்து, மாணவர்களை விடுதலை செய்யுமாறு மன்றாடினர். ஆனால், "விடுதலை செய்வேன் என கனவு காணாதீர்கள். நெவர்' என்று எகத்தாளமாக கொக்கரித் திருக்கிறார் ஹத்துருசிங்கே.

இது பற்றி விசாரித்த போது,’’""முடங்கிக்கிடக்கும் பல்கலைக்கழகத்தின் செயல் பாடுகளை துவக்க வேண்டு மாயின் மாணவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்று பேராசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது, "எங்க ளின் முப்பது வருட கால அழிவுக்கு புலிகளும் அவர்களை வளர்த்துவிட்ட தமிழர்களும் யாழ் பல்கலைக்கழகமும்தான் காரணம். அந்த பல்கலைக்கழகம் முடங்கிக்கிடந்தால் எங்களுக் கென்ன? அதனால் மாணவர் களின் விடுதலை நடக்காது' என்று திமிராகப் பேசினார் ஹத்துருசிங்கே. 


இந்த பேச்சைக் கண்டித்த பேராசிரியர் சிறிசற்குணராஜா, "தமிழர்களின் உரிமைகளும் அடிப்படை பிரச்சினைகளும் அலட்சியப்படுத்தப்பட்டதி னாலேயே புலிகள் உருவாகினர். உங்கள் அழிவுகளுக்கு தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாததும் சிங்கள அரசியல்வாதிகளும் தான் காரணம்' என்று வாதாடி யிருக்கிறார்.

இப்படியே வாதங்கள் நடந்துகொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஹத்துருசிங்கே, "கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் நாங்கள் விசாரித்தபோது, "பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். மீண்டும் யுத்தத்தை துவங்குவார். தமிழீழம் உருவாகும்' என அவர்கள் உறுதியாக பேசுகிறார்கள். அந்த மாணவர் களில் ரெண்டு பேர் புலிகள் இயக்கத்தில் இருந்திருக் கிறார்கள் என்பதற்கு ஆதாரம் கிடைத்திருக்கிறது. அதனால் மாணவர்களின் தமிழீழ கனவு கலைக்கப்படும் வரை அவர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்' என்று கோபமாகக் கூறிவிட்டு எழுந்துப்போய் விட்டார்''’’என்று விவரிக்கின்றனர் சக மாணவர்களின் விடுதலைக்காகப் போராடி வரும் பல்கலைக்கழக மாணவர்கள்.

மாணவர்களை ஒடுக்குவதன் மூலம் மாணவர்களிடமும் ஈழத்தமிழர்களிடமும் நிலை கொண்டிருக்கும் தமிழீழ சிந்தனையை அழித்துவிட முடியாது என்பதை சிங்கள ராணுவம் எப்போது உணரப் போகிறது?

-ஆர்.இளையசெல்வன்