பக்கங்கள்

பக்கங்கள்

3 டிச., 2012


இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு! தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தனித்து செயல்பட முடிவு!
இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தனியான பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளில் ஒன்றான ரெலோ, இந்த முயற்சியை அடுத்து, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளில் நேரடியாக கலந்து கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தம்மிடம் பிரேரணை ஒன்று உள்ளதாக தெரிவித்துள்ள போதிலும், அந்த பிரேரணையை இரகசியமாக வைத்துள்ளது. காரணம், அந்த பிரேரணையில் ‘ஈழம்’ கோரிக்கை இல்லாமல், ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளதால், வெளிநாட்டு தமிழ் அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பலாம் என்ற அச்சம் என கூறப்படுகிறது.
ரெலோவின் பொதுச் சபை கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது. இதன்போதே தனியான பிரேரணையை சமர்ப்பிப்பது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தனியான பிரேரணையை தயாரிப்பதற்காக அரசியலமைப்பு சட்ட அறிஞர்கள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இந்த குழுவின் தலைவராக, ரெலோவின் தலைவர் செல்வம் அடைகலநாதன் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழ விடுதலைப் போராளி இயக்கங்களுக்கு இந்திய மத்திய அரசு ஆதரவு வழங்கிய நாட்களில், மத்திய அரசின் அதி நம்பிக்கைக்குரிய அமைப்பாக இருந்ததே, இந்த ரெலோ இயக்கம்தான்.
தற்போது இலங்கை இனப் பிரச்சினையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் ரெலோ இயக்கத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும் என இந்தியா வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெலோவின் ஜனவரி 27-ம் மற்றும் 28-ம் தேதிகளில் யாழ்ப்பாணத்தில் கட்சி மாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.