பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜன., 2013


புலம்பெயர் தமிழரின் அழுத்தங்களை ஏற்று சர்வதேசம் செயற்படக்கூடாது- ஜி.எல். பீரிஸ்
புலம் பெயர் தமிழர்கள் தாங்கள் வாழுகின்ற நாடுகளில், தங்களது நாட்டு அரசுக்கு இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ள கொடுக்கின்ற அழுத்தங்களை ஏற்றுக் கொண்டு சர்வதேசம் செயற்படக் கூடாது. இவ்வாறு இந்தியா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த அழுத்தங்களினால், எமது நாட்டின் உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதை ஒரு போதும் நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. சில நாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களின் அழுத்தங்கள் காரணமாக, சில நாடுகள் இலங்கை மீது கடுயைமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. எனினும், வெளிநாட்டு சக்திகளின் அரசியல் உதைபந்தாக இலங்கை செயற்படாது.
பெரிய வளங்கள் மற்றும் ஊடக வலையமைப்பின் ஊடாக இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்க சில சக்திகள் முயற்சித்து செய்து வருகின்றன.
பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கிய நாடு என்ற ரீதியில் உலக சமூகம் இலங்கைக்கு அனுதாபத்துடன் கூடிய ஒத்துழைப்பையே வழங்க வேண்டும்.
வெளிநாடுகளில் உள்ளவர்களின் நோக்கங்களின் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க இடமளிக்க முடியாது.
13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பது குறித்து நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமே தீர்வு காணமுடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பின்றி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பணிகளைத் தொடர முடியாது என்று ஜி.எல்.பீரிஸ் அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.