பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜன., 2013


மு.கா vs தே.கா: கிழக்கு மாகாண சபை கூட்டத்தில் அமளி!


கிழக்கு மாகாண சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் இடம்பெற்ற கடும் வாக்குவாதத்தை அடுத்து அங்கு அமளிதுமளி ஏற்பட்டது.
 

இதனையடுத்து சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. 

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை 9.45 மணியளவில் சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் ஆரம்பமானது. 

இதன்போது, கிழக்கு மாகாண பாடசாலைகளில் மூன்று வருடங்கள் கடமை நிறைவேற்றும் அதிபர்களாக பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பிலான தனிநபர் பிரேரணையொன்றினை திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் சபையில் சமர்ப்பித்திருந்தார். 

மேற்படி பிரேரணை தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தின்போது அமைச்சர் உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.ஏ. தவம் ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தினையடுத்தே சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. 

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்பட்ட அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேச பாடசாலைகளில் பணியாற்றிய சுமார் 50 ஆசிரியர்கள் பொத்துவில் பிரதேசத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், இந்த இடமாற்றத்தின்போது தான் அரசியல் தலையீடுகளை மேற்கொள்ளாமல் நீதியாக நடந்து கொண்டதாகவும் சபையில் அமைச்சர் உதுமாலெப்பை தெரிவித்தார். 

இதனை மறுத்துப் பேசிய உறுப்பினர் ஏ.எல்.எம்.தவம் - அக்கரைப்பற்றுப் பிரதேச பாடசாலைகளில் கடமையாற்றும் அமைச்சர் அதாஉல்லாவின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு மேற்படி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளபோதும், அவர் பொத்துவில் பாடசாலைக்குச் செல்லாமல் தனது பழைய பாடசாலையிலேயே கையொப்பமிட்டு வருவதாக தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்தே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து சபை நடவடிக்கையினை தவிசாளர் ஆரியவதி கலப்பதி 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.