பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜன., 2013


காணாமல்போன யுவதி, காரைநகர் கடற்படை முகாமிற்கு அருகில் உருக்குலைந்த சடலமாக மீட்பு வன்புணர்வுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்டமைக்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணொருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில், காரைநகரில் பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நேற்று முன்தினம் காரைநகர் கடற்படையினரின் முகாமிற்கு அருகிலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்தே குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த டிசெம்பர் மாதம் 6ம் திகதி காணாமல்போன மனநலம் பாதிக்கப்பட்ட இராசதுரை கஜேந்தினி (வயது27) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண், கடந்த மாதம் 7ஆம் திகதி காரைநகர் கலையடிச்சந்தியில் உள்ள கோயில் ஒன்றில் இரவு 9 மணியளவில் இருந்துள்ளார். குறித்த பெண்ணை விசாரித்த மக்கள் அவர் தெரிவித்த முரண்பாடான தகவல்களையடுத்து அப்பகுதிக் கிராம சேவகருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
கிராம சேவகர் ஊடாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. வட்டுக்கோட்டைப் பொலிஸாரும் கிராம சேவகரும் குறித்த பெண்ணை முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றிக் காரைநகர் வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றுள்ளனர்.
காரைநகர் வைத்தியசாலையிலிருந்த வைத்தியர் குறித்த பெண்ணை வைத்தியசாலையில் ஏற்க மறுப்புத் தெரிவித்ததையடுத்து, குறித்த பெண் காரைநகர் வலந்தலைச் சந்தியில் இறக்கி விடப்பட்டுள்ளதாகவும் இதன்பின்னர் அவர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மக்கள் நடமாட்டமற்ற காட்டுப் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் மிக மோசமாக உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது.
குறித்த பெண் வன்புணர்வுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்டமைக்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.