பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜன., 2013



மகிந்தரின் தாமரைத் தடாகம் தகர்ந்தது ! தரவுகள் வெளியாகியது 
லோட்டஸ்-பொண்ட் (www.lotuspond.lk ) என்று அழைக்கப்படும் மகிந்தரின் இணையத்தளம் சற்று நேரத்துக்கு முன்னர் தகர்க்கப்பட்டுள்ளது. இத்தோடு தேசிய முதலீட்டு சபையின் இணையத்தளமும் இனந்தெரியாத நபர்களால் ஊடுருவப்பட்டுள்ளதாக  இணையம் அறிகிறது. டேவி ஜோன்ஸ் என்று அழைக்கப்படும் நபர் ஒருவரால்
தான் இத் தாக்குதல்கள் நடைபெறுவதாக, ஆங்கில இணையங்கள் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஷவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிவந்த லோட்டஸ் பொண்ட் இணையம், மற்றும் சர்வதேச முதலீட்டுச் சபையின் இணையங்களில் உள்ள சில தரவுகள், தாக்குதல்காரர்களால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், இலங்கை அரசோடு யார் யார் முதலீடு செய்ய முற்பட்டார்களோ அவர்களின் தகவல்களும் வெளியாகும் நிலை தோன்றியுள்ளது.

2009ம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கிவந்த சில வெளிநாட்டுத் தமிழர்கள் , அங்கே சென்று பாரிய முதலீடுகளைச் செய்துள்ளார்கள். இவர்களில் கணிசமான சிலர், இலங்கை அரசுடன் இணைந்தே இந்த முதலீடுகளைச் செய்துள்ளார்கள். தற்போது இத் தரவுகள் அடங்கிய இணையம் உடைக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட பல தரவுகள் வெளியாகும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக் விடையம் அறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே இலங்கை அரசின் தேசிய பாதுகாப்பு இணையம், ரூபாவாகினி இணையம் என்பன தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். லோட்டஸ் பொண்ட்(www.lotuspond.lk ) என்னும் இணையம் மற்றும் தேசிய முதலீட்டுச் சபையின்(investsrilanka.com) இணையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியபோதும், தேசிய முதலீட்டுச் சபையின் இணையம் சற்று நேரத்துக்கு முன்னர் வழமைக்கு திருப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இருப்பினும் தாக்குதல்காரர்கள் தரவுகளை களவாடிச் சென்றுவிட்டார்கள். அவை எப்போது வெளியிடப்படும் என்பது போன்ற விபரங்கள் இதுவரை அறியப்படவில்லை.