பக்கங்கள்

பக்கங்கள்

21 பிப்., 2013


தமிழகக் கட்சிகளின் கடும் அழுத்தத்தில் சிக்கியிருக்கும் டில்லி


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதான மகன் பாலச்சந்திரன் பதுங்கு குழிக்குள் தடுத்து வைக்கப்பட்டு அதன் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பான புகைப் படங்களை பிரிட்டனின் சனல் 4 வெளியிட்டதையடுத்து தமிழக கட்சிகள் ஆளும் ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி அரசாங்கத்திற்கு அதிகளவு அழுத்தங்களை ஏற்படுத்தி வருகின்றன. 
மனித உரிமைகள் பேரவையில் மார்ச்  15 இல் மற்றொரு தீர்மானமொன்றைக் கொண்டுவருவதற்கு அமெரிக்கா தயாராகி வருகிறது. இந்நிலையில் அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு  தமிழகக் கட்சிகளிடமிருந்து வலியுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. அத்துடன், இலங்கையுடனான இந்தியாவின் இராஜதந்திர உறவுகளை மீள் பரிசீலனைக்குட்படுத்துமாறு அவை வலியுறுத்த ஆரம்பித்துள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தனியொரு நாட்டை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை ஆதரிப்பதிலிருந்தும் தவிர்த்துக்கொள்ளும் நடைமுறையையே இந்தியா பின்பற்றி வந்தது. ஆயினும் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கெதிரான உணர்வுகள் அதிகரித்ததால் அந்நிலைப்பாட்டிலிருந்தும் இந்தியா விலகியிருந்தது. இந்த  விடயம் இலங்கைக்கு விசனத்தை ஏற்படுத்தியது. ஜம்மு காஷ்மீர் விடயத்துடன் இந்த விடயத்தை அதாவது ஆட்புல ஒருமைப்பாடு தொடர்பான விவகாரத்தை இந்தியா கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று  இலங்கை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அத்துடன், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்கும் புலிகளே பொறுப்பாளிகள் என்பதை இந்தியாவிற்கு இலங்கை ஞாபகமூட்டியுள்ளது.  

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள உத்தேசத்தீர்மானத்திற்கு இந்தியா எதிர்த்து வாக்களிக்குமா என்பது குறித்த சந்தேகங்கள் இலங்கைக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும் தனது நீண்டகால பங்காளியான தி.மு.க.விடமிருந்து புதிதாக எழுந்துள்ள அஸித்தத்தால் திருப்திப்படுத்த வேண்டிய நிலைமை மத்திய அரசிற்குக் காணப்படுகிறது. அதேவேளை, தமிழகத்தின் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்குமாறும் வலியுறுத்தி வருகின்றது. சனல்4 ஆவணப்படமானது போர்க் குற்றங்களை ஒத்ததாக அமைந்திருப்பதால் இலங்கைக்கெதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்பது இந்தக் கட்சிகளின் நிலைப்பாடாகக் காணப்படுகிறது. துப்பாக்கி சன்னங்கள் உடலில் பாய்ந்த நிலையில் பிரபாகரனின் மகன் காட்சியளிக்கும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் மத்திய அரசிற்கு நெருக்கடியான விடயமாக அமையும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீது இந்த விடயம் குறித்து மாநில அரசியல் கட்சிகள் தமது அழுத்தத்தை அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது. 

இந்தப் புகைப்படங்கள் இலங்கைப் போர்க்குற்றங்கள் இழைத்திருப்பதற்கான மற்றொரு ஆதாரமாக இருப்பதாக தி.மு.க. வின் ஏற்பாட்டு செயலாளர் ரி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். இலங்கை சர்வதேச நீதிமன்றின் முன்னாள் நிறுத்தப்பட வேண்டும். ஜெனீவாவில் இலங்கைக்கெதிராக இந்தியா வாக்களிக்க வேண்டுமென்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என அவர் தெரிவித்ததாக ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. 

மேலும், எதிர்வரும் மார்ச் 7 இல் ரெசோ கூட்டத்தை இந்தியத் தலைவர் புதுடில்லியில் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தி.மு.க. இறங்கியுள்ளது. பிரபாகரனின் மகனின் புகைப்படங்களைப் பார்த்து கருணாநிதி பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு அவர் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்பார் என்று இளங்கோவன் கூறியுள்ளார்.  டில்லியில் இடம்பெறும் டெசோ மாநாட்டில் கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்த நாங்கள் முயற்சிப்போம் என்று அவர் மேலும் கூறியுள்ளார். தேசிய மட்டத்தில் கவனத்தை ஈர்ப்பதற்காக இலங்கை விவகாரம் தொடர்பான டெசோ மாநாட்டிற்கான ஏற்பாடுகள் துரிதமாக இடம்பெறுகின்றன. தலைநகரில் இந்த மாநாட்டை நடத்துவதன் மூலம் உணர்வுகளை பரந்தளவில் அதிகரிக்கச் செய்ய முடியுமென தி.மு.க. கருதுகிறது. காங்கிரஸ், பாரதீய ஜனதா, இந்திய மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட 35 தேசிய கட்சிகள் டெசோ மாநாட்டில் கலந்துகொள்ளவிருப்பதாக தி.மு.க. தெரிவித்துள்ளது.  

பாராளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அமர்வின் போது இந்த விவகாரத்தை எழுப்புவதன் மூலம் தேசியத் தலைவர்களின் செல்வாக்கை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், இந்தச் சந்திப்பில் சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் ஏனைய மனித உரிமை அமைப்புகள் பங்கு பற்றும் என்று இளங்கோவன் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் தீர்மானத்தை சமர்ப்பிக்க வேண்டுமென அண்மையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார்.

இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வொன்றைக் காணும்  வரை இந்தத் தடைகள் அமுலில் இருக்க வேண்டுமென்பது அவரின் வலியுறுத்தலாக உள்ளது.  தி.மு.க. பொருளாளர் எம்.கே. ஸ்டாலின் மற்றும் தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் ரி.ஆர்.பாலு ஆகியோர் ஐ.நா. பிரதி செயலாளர் நாயகம் ஜான் எலியசனையும்  மனித உரிமை பேரவை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையையும் சந்தித்து அண்மையில் சென்னையில் இடம்பெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சமர்ப்பித்திருந்தனர்.