பக்கங்கள்

பக்கங்கள்

6 பிப்., 2013


சென்னையில் முதல் கட்டமாக மாநகராட்சி சார்பில் 15 மினி கேன்டீன்கள்

சென்னை மாநகராட்சி பகுதியில் 1000 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி மினி கேன்டீன்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது.
 
      
முதற்கட்டமாக 15 இடங்களில் இந்த மாத இறுதிக்குள் மினி கேன்டீன்கள் திறக்கப்படுகிறது. 15 மண்டலங்களிலும் பயன்படுத்தாமல் உள்ள மாநகராட்சி கட்டிடங்களில் இந்த கேன்டீன்கள் தொடங்கப்படும். இதற்காக மாநகராட்சி ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் கட்டிடங்கள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
 
இந்த கேன்டீன்களில் 1 ரூபாய் 1 பிளேட் இட்லி (2 இட்லி) விற்கப்படும். இதற்கு சாம்பார், சட்னி வழங்கப்படும். முதலில் மழைக்கால நிவாரண மையங்களில் உணவு தயாரித்து கேன்டீன்களுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் இப்போது கேன்டீன்களிலேயே சமையல் கூடங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த கேன்டீன்களில் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் மட்டும் விற்கப்படும்.
 
இந்த கேன்டீன்கள் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் மூலம் நடத்தப்படும். இதற்காக தமிழக பெண்கள் மேம்பாட்டு நிறுவன மூலம் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதற்கட்டமாக 7 மண்டலங்களை சேர்ந்த 35 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. சுகாதாரமாக அதிக அளவில் உணவுகளை தயாரிப்பது பற்றி அவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.