பக்கங்கள்

பக்கங்கள்

6 பிப்., 2013



ராஜபக்சேவுக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம்: திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

      
இலங்கை அதிபர் ராஜபக்சே வருகிற 8-ந்தேதிபீகாரில் உள்ள புத்த தளத்திற்கும், ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலுக்கும் வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஈழத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்த போர்க்குற்றவாளி ராஜபக்சேவை இந்தியாவிற்குள் அனுமதிப்பது கோடிக்கணக்கான தமிழர்களை அவமதிக்கும் செயலாகும். 

ஈழத்தில் தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களாக சிவன் கோவில், முறிகண்டி கோவில் உள்ளிட்ட கோவில்களை தகர்த்துத் தரைமட்டமாக்கிவிட்டு, திருப்பதி கோவிலுக்கு தரிசனம் செய்ய இந்தியாவுக்கு வருவதும், இந்திய அரசு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதும் வெட்கக்கேடான செயலாகும். கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்திய அரசின் இத்தகைய தமிழின விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. 

போர்க்குற்றம் புரிந்த ராஜபக்சேவுக்கும் சிங்கள அரசுக்கும் எதிராக உலக அரங்கில் எதிர்ப்புக்குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் சூழலிலும் தமிழீழத் தமிழர்களை இன்னமும் முள்வேலிக்குள் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தும் ராஜபக்சேவை இந்திய அரசு கண்டிக்காமல் வரவேற்பது கண்டனத்துக்குரியதாகும். 

இனப்படுகொலையாளி ராஜபக்சேவுக்கு தமிழர்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் திருப்பதியில் ஆந்திர விடுதலைச் சிறுத்தைகள் கறுப்புக்கொடி ஏந்தி முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவார்கள். ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்திடும் வகையில் ஆந்திர மாநில விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் இப்போராட்டத்தில் தமிழின உணர்வாளர்களும் ஜனநாயக சக்திகளும் பெருவாரியாகக் கலந்துகொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.