பக்கங்கள்

பக்கங்கள்

1 மார்., 2013


இலங்கை சிறையில் வாடிய 14 தமிழர்கள் விடுவிப்பு! திருச்சி சிறையில் அடைக்க முடிவு!
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை சேர்ந்த சில வியாபாரிகள் சென்றனர். அவர்களில் ராமநாதபுரத்தை சேர்ந்த 8 பேர், தஞ்சாவூரை சேர்ந்த 2 பேர், தேனியை சேர்ந்த 2 பேர், நாமக்கல், திண்டுக்கலை
சேர்ந்த தலா ஒருவர் என 14 பேர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் 10 பேருக்கு ஆயுள் தண்டனையும், 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டன. இவர்கள் இலங்கையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு அங்குள்ள சிங்கள கைதிகளால் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 
இதுபற்றி அவர்களது குடும்பத்தினர் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். தங்கள் குடும்பத்தினர் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைத்து உள்ளனர். அவர்களை மீட்க உதவும்படியும் கூறியிருந்தனர். 
தமிழக அரசு, இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி இலங்கை சிறையில் உள்ள 14 தமிழக வியாபாரிகளை சென்னைக்கு அழைத்து வரவேண்டும் என வலியுறுத்தியது.
இலங்கை அரசு 14 பேரை இந்தியாவிற்கு அனுப்ப ஒப்புக் கொண்டது. இலங்கை நீதிமன்றம் விதித்த தீர்ப்பை இந்தியாவில் செயல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் 14 பேரையும் அனுப்ப ஒப்புக் கொண்டது. இதையடுத்து நேற்று இரவு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து முதற்கட்டமாக பழனிச்சாமி உதயகுமார்(35), சையத்கரீம்(35) ஆகியோரை தமிழக போலீசார் அழைத்து வந்தனர். 
பின்னர் அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோல் இலங்கையில் இருந்து தலா இரண்டு பேராக விமானத்தில் நாளை (2-ந் தேதி) வரை சென்னைக்கு அழைத்து வந்து புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர் 14 பேரும் திருச்சி சிறைக்கு மாற்றப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.