பக்கங்கள்

பக்கங்கள்

20 மார்., 2013



நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகம், தொண்டை வறண்டு போகுமளவுக்குக் கடுமையான முழக்கங்கள் இட்டபடி மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள், சுற்றிலும் காவலர்கள் பாதுகாப்புக்காக அவர்களோடு நின்று கொண்டிருக்கிறார்கள்.

"கொடுங்கோலன் ராஜபக்ஷேவைத் தூக்கிலிடு"

"இந்திய அரசே, இலங்கையை ஆதரிக்காதே"

"தனித் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பை நடத்து"

"போர்க்குற்றவாளிகளைத் தூக்கிலிடு"

"வெல்லட்டும் வெல்லட்டும், மாணவர் புரட்சி வெல்லட்டும்".

முழக்கங்கள் விண்ணதிர ஒலிக்கிறது.

இடைவெளியில் சில மாணவர்கள் தேநீர் அருந்துவதற்காக அருகில் இருக்கும் கடைக்குள் நுழைகிறார்கள்.

பாதுகாப்புக்காக அங்கு வந்திருந்த சில அதிரடிப்படை வீரர்களோடு தலைமைக் காவலர் அங்கு நின்று கொண்டிருக்கிறார்.

மாணவர்கள் உள்ளே நுழையத் தயங்கியபடி வெளியே நின்றபடி தேநீர் சொல்கிறார்கள்.

தலைமைக் காவலர் முழக்கங்கள் இட்டுக் களைத்திருந்த மாணவர் ஒருவரை அழைக்கிறார்.

"ஏலே, காலைல இருந்து எதாச்சும் சாப்டியாலே".

"கண்ணெல்லாம் உள்ள கூடி போயிட்டு".

"உயிர விட்டுக் கத்தாதலே"

"வயித்துக்கு எதாச்சும் சாப்பிடு"

காவலரின் திடீர்ப் பாசம் கண்டு மருள்கிறார்கள் மாணவர்கள்.

தலைமைக் காவலர் கடைக்காரரிடம் சொல்கிறார், "யோவ், கோட்டிப் பயலுகளுக்கு என்ன வேணுமோ கொடும், துட்டு நான் குடுக்கேன் என்ன???"

எனக்கும் இவங்களப் போல ஒரு மகன் இருக்காம்ல, மூணு நாளா தூத்துக்குடில பட்டினியாக் கிடக்கான், செத்தாலும் பரவாயில்லப்பா, இப்போ விட்டா எப்பவுமே நாம ஜெயிக்க முடியாதுன்னு போன்ல சொல்றான். என்ன செய்றது, நாங்க பாக்குற வேலை அப்பிடி, போலீஸ்காரனும் மனுஷன் தாம்ல, எம்மக்களப் போலத் தான் உங்களைப் பாத்தாலும் தெரியுது , நல்லா வயித்துக்குச் சாப்பிடுங்க, அப்புறமா போராட்டம் பண்ணுங்க".

"வேண்டாம்னு தடுக்கவும் முடியல, பண்ணுங்கன்னு ஆதரிக்கவும் முடியல, போலீஸ்காரன் பொழப்பு ஒரு சாபக்கேடு கண்ணா",

பக்கத்தில் இருக்கும் காவலரிடம் புலம்பி விட்டு மாணவர்கள் கொடுக்க முயன்ற பணத்தைத் தடுத்து தனது காக்கிச் சட்டையின் ஈரத்தில் இருந்து நூறு ரூபாய்த் தாளை எடுத்து கடைக்காரரிடம் கொடுக்கிறார் தலைமைக் காவலர் என்று சொல்லப்படுகிற ஒரு தமிழனின் அப்பா.

தமிழகமெங்கும் இப்படித்தான் மாணவர்கள் தங்கள் சொந்த இனத்தின் மனசாட்சியை உலுக்கியபடி வீதிகளில் வெறி கொண்ட கண்களோடும், நிமிர்ந்த நெஞ்சங்களோடும் அலைகிறார்கள், இழந்த தமிழர்களின் மானத்தை மீட்டெடுக்கும் புதிய போராளிகளாய் அவர்கள் உலகெங்கும் போர்க்கோலம் பூண்டிருக்கிறார்கள்.

வழக்கமாய் திரைப்பட அரங்குகளின் முன்னாலும், கிரிக்கெட் மைதானங்களின் முன்னாலும் படை திரளும் ஒரு பாமரக் கூட்டம் என்று பகடி பேசியவர்களின் முகங்களைக் கேள்விக் குறிகளால் நிரப்பியபடி தங்கள் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் கூர்மையாய்த் திரளும் இவர்களின் புதிய அவதாரம் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு எம்மை அழைத்துப் போகிறது.

தெளிவான சொற்கள், சமரசம் இல்லாத கோரிக்கைகள், மண்டியிடாத வீரம், ஒழுங்கான நகர்வுகள்.

நெடுங்காலத் தோல்விகளுக்கும், குறுகிய வெற்றிகளுக்கு அப்பால் தெளிவான ஒரு புள்ளியாய் விடியல் எமை நோக்கி வருகிறது.

இப்போது நமது கடமை தலைமைக் காவலர் செய்ததைப் போல எமது தம்பிகளின் களைப்பைப் போக்குவதும், அவர்கள் நடக்கும் பாதையைச் சுத்தம் செய்வதும் மட்டும்தான்.