பக்கங்கள்

பக்கங்கள்

25 மார்., 2013


எனக்கு உடல்நிலை சரியில்லை: செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை: மதுரையில் மு.க.அழகிரி பேட்டி
 கடந்த மூன்று மாத காலமாக சென்னையில் தங்கியிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இன்று (25.03.2013) காலை மதுரை வருவதாக அவரது ஆதரவாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் உதயகுமார், திமுக 7ம் பகுதி செயலாளர் முபாரக் மந்திரி ஆகியோர் மதுரை விமான நிலையத்தில் வரவேற்க அமர்ந்திருந்தனர். 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை திமுக செயற்குழு கூட்டம் நடக்க உள்ள நிலையில் மதுரை வருகை குறித்து அவரிடம் கேள்வி கேட்க மீடியாக்களும் குவிந்திருந்தன.
மதுரை வந்த மு.க.அழகிரியை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். திமுக செயற்குழு கூட்டம் நடக்கும்போது மதுரை வந்துள்ளீர்களே என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த மு.க.அழகிரி,
250க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களில் எத்தனை பேர் வந்திருக்கிறார்கள். அதில் ஒரு சிலர் ஆப்செண்ட் ஆகியிருப்பார்கள். அதில் ஒருத்தராக என்னை கருதுங்கள். எனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் கலந்துகொள்ள முடியவில்லை. மதுரையில் என் வீட்டில் ஓய்வு எடுக்க வந்துள்ளேன். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் டெல்லியில் எனக்கு அலுவலகம் இல்லை. அலுவலகம் இல்லாததால் மதுரை வந்தேன். 
ப.சிதம்பரத்தையும், வாசனையும் தனியாக சந்தித்தததாக செய்திகள் வெளியாகி உள்ளதே?
அவர்களை மட்டுமா சந்தித்தேன். பிரதமர் மன்மோகன் சிங், சோனியா, காங்கிரஸ் நண்பர்கள் பலரையும் சந்தித்தேன் என்றார்.
தலைமைக்கு கட்டுப்படுவேன் என்று டெல்லியில் சொன்னீர்களே? செயற்குழு கூட்டத்தை புறக்கத்துள்ளீர்களே? 
கட்டாயம் வரவேண்டும் என்று சட்டம் இருக்கா. நூறு பேரு இருக்காங்க என்றால் எத்தனை பேரு வந்திருக்காங்க என்று நீங்களே பாருங்கள்.
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டீர்களே: உங்களின் அடுத்த மூவ் என்ன?
ஒரு மூவ்வும் இல்லை. உடம்பு சரியில்லை ஓய்வு எடுக்க வந்துள்ளேன். 
செயற்குழு கூட்டத்தை புறக்கணித்துவிட்டு மதுரை செல்வதை அமைச்சராக இருந்த நீங்கள் கட்சி தலைமையிடம் (கலைஞர்) சொன்னீர்களா?
கட்சி தலைவரிடம் எனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லிவிட்டுதான் மதுரை கிளம்பி வந்தேன்.

வாசன், சிதம்பரம் சந்திப்பில் உள்நோக்கம் ஏதேனும் உள்ளதா?
அப்படியெல்லாம் இல்லை. நண்பர்கள் என்ற முறையில் சந்தித்தேன். நட்பு ரீதியாக பேசினேன். அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை.

புதிய அரசியல் பிரவேசம் ஏதும் இருக்குமா?
புதிய, பழைய என்றெல்லாம் கிடையாது. எல்லாம் ஒரே அரசியல்தான்.
மத்திய அமைச்சர் பதவியை நீங்களும், நெப்போலியனும் தனியாக சென்று ராஜினாமா செய்துள்ளீர்களே?

எனக்கு தகவல் காலதாமதமாக கிடைத்தது. அதனால் காலதாமதமாக சென்றேன். வேறு காரணம் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை என்றார்.