பக்கங்கள்

பக்கங்கள்

9 மார்., 2013


எழுச்சி கொண்ட மாணவர் சக்திக்கு ஆதிக்க சக்திகள் பதில் சொல்ல வேண்டும்!


மிகப் பெரிய மனிதப் பேரவலம் நிகழ்ந்தமை தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கையை நோக்கி கேள்வி எழுப்பத்தயாராகியிருக்கின்ற போதிலும் சம்பவங்கள் தொடர்பிலான நேரடிச் சாட்சியங்களாக வாழும் இலட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் வாய் திறக்க முடியாத
துப்பாக்கி முனைக்குள் முடங்கியுள்ளனர். ஆற்றாமை, பரிதவிப்பு, வேதனை அனைத்தையும் சுமந்து வாழும் ஈழத் தமிழ் சமூகம் தனக்கான நியாயத்தினைப் பெறுவதற்காக வாய் கூடத் திறக்க முடியாத நிலையில் ஏங்கியே வாழ்கிறது.
ஆனாலும் கூட ஈழத்தமிழனின் கண்ணீருக்காக இரத்திற்காக உலகத் தமிழினம் எழுச்சி கொண்டிருப்பது ஈழத்தமிழ் மக்களுக்கு சற்று ஆறுதலைத் தந்திருக்கிறது.  பல்லாயிரம் உயிர்க் கொடைகளுடன் முன்னெடுக்கப்பட்ட தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதாகத் தெரிவித்து அப்பாவித்தமிழர்களின் உயிர்கள் இலட்சக்கணக்கில் அதிகார வர்க்கங்களால் பறித்தெடுக்கப்பட்டன. தமிழின அழிப்பின் சூத்திரதாரிகளாக இலங்கையுடன் கைகோர்த்து நின்ற பல்வேறு நாடுகளின் முகத்திரைகள் கிழிந்துவிடும் என்ற அச்ச நிலையை தற்போதையை ஜெனீவாக்களம் ஏற்படுத்தியிருக்கின்றது.
ஈழப்போரின் போது மேற்கொள்ளப்பட்ட மிக மோசனமான இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான ஆதாரங்கள் தற்போது வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. குறித்த ஆதாரங்கள் தமிழ் மக்களையும் மனித உரிமையை மதிக்கின்ற மனிதாபிமானம் கொண்டவர்களையும் தட்டி எழுப்பியிருக்கின்றன. குறிப்பாக தாய் தமிழகத்தின் உணர்வின் எல்லையை போர்க்குற்ற ஆதாரங்கள் தட்டியிருக்கின்றன. சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியும் தனி ஈழம் தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் உயிர் துறக்கவும் தமிழக உணர்வாளர்கள் தயாராகியிருக்கின்றனர்.
இலங்கைக்கான நெருக்கடி நேரங்களில் எல்லாம் இலங்கையைக் காப்பாற்றத் தயங்காத இந்திய மத்திய அரசுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தவல்ல மிகப்பெரிய சக்தியாகிய மாணவர் சக்தி களத்தில் குதித்திருக்கின்றமை ஈழத்தமிழ் மக்களுக்கு சற்று ஆறுதலையும் ஆதிக்க சக்திகளுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
எந்தப் பலத்தையும் தட்டிப்பார்க்கும் வல்லமை மாணவர் சக்திக்கு உள்ளது. சென்னை லயோலாக் கல்லூரி மாணவர்கள் பத்துப்பேர் தொடங்கியிருக்கின்ற உண்ணாநிலைப் போராட்டத்தின் அனல்,  வீச்சுப்பெற்று தமிழகம் எங்கும் பரவி இந்திய மத்திய அரசினை உலுப்பிப்பார்க்கவேண்டும். இடையறாது தொடரும் தாய்த் தமிழகத்தின் மன உணர்வுகளை இனியும் அசண்டை செய்ய முடியாது என்கின்ற நிலையினை இந்திய மத்திய அரசு புரிந்து கொள்ளவேண்டும்.
போராட்டங்களை நசுக்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கடந்து இலக்கை எட்டும்வரை வன்முறையற்ற வழியில் முழுமையான பலத்தினையும் ஒன்றுதிரட்டி மாணவர் சக்தி போராடவேண்டும். மீண்டும் மீண்டும் ஒலிக்கும் கோரிக்கைக் குரலுக்கு என்றோ ஒரு நாள் உலகம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்