பக்கங்கள்

பக்கங்கள்

20 மார்., 2013


    "என்னிடம் விவாதிக்கவில்லை”: அழகிரி கோபம்

மத்திய அரசில் இருந்தும் கூட்டணியில் இருந்தும் விலகும் முடிவினை திமுக தலைவர் கருணாநிதி நேற்று அறிவித்தார். இதை அடுத்து, மத்தியில் உள்ள திமுக அமைச்சர்கள் இன்று தங்களது ராஜினாமாக் கடிதங்களை பிரதமரிடம் அளித்தனர். இந்த நிலையில்
, திமுக தலைவர் தன்னிடம் இந்த முடிவு குறித்து ஏதும் விவாதிக்க வில்லை என்று மு.க. அழகிரி தனது வருத்தத்தை தெரிவித்தாராம். தன்னிடம் ஆலோசிக்காமல் திமுக தலைவர் எடுத்த இந்த முடிவு காரணமாக அவர் கோபத்தில் இருந்ததாக தில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
திமுகவின் விலகல் முடிவு குறித்து நேற்று, தில்லியில் செய்தியாளர்கள் மு.க. அழகிரியிடம் கேட்டபோது, தலைமையின் முடிவே தன் முடிவு என்று கூறிச் சென்றார். ஆனால், தன்னிடம் இது குறித்து கலந்து ஆலோசிக்கவில்லை என்று அழகிரி வருத்தப்பட்டதாகத் தெரிகிறது. எனவே, அழகிரியும் நெப்போலியனும் தனியே சென்று பிரதமரைச் சந்திப்பார்கள் என்று கூறப்பட்டது.
இன்று காலை பிரதமரைச் சந்தித்த 3 அமைச்சர்கள் தங்களது ராஜினாமாக் கடிதத்தை அவரிடம் அளித்தனர். அதில் அழகிரியும் நெப்போலியனும் இடம்பெறவில்லை.
இந்நிலையில், தனக்கு மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியே வர விருப்பமில்லை என அழகிரி கூறியதாக தகவல்கள் வெளியாகின. எனவே அழகிரியும் நெப்போலியனும் தங்களின் ராஜினாமாக் கடிதத்தைக் கொடுக்கவில்லை எனக் கூறப்பட்டது.
ஆனால் இன்று மதியம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் அழகிரி மற்றும் நெப்போலியன் ஆகிய இருவரும் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர்.