பக்கங்கள்

பக்கங்கள்

28 மார்., 2013


தாக்கப்பட்ட மாணவர்களை வைகோ நேரில் சென்று சந்திப்பு: தாக்கியவர்களை கைது செய்யுமாறு கோரிக்கை
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக திருச்சியில் நேற்று போராட்டம் நடத்திய மாணவர்களுக்கும், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டது.
இதில் தாக்கப்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் சத்யகுமரன், முகமது ஜப்ரி, கஜேந்திரபாபு, பொறியியல் கல்லூரி மாணவர் வெங்கடேசன் ஆகியோர் திருச்சி அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குறித்த மாணவர்களை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நேற்று இரவு திருச்சி அரசு வைத்தியசாலைக்கு சென்று ஆறுதல் தெரிவித்தார்.
மாணவர்களின் அருகில் வைகோ வந்ததும் மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். எங்களது அறவழி போராட்டத்தை கொச்சைப்படுத்து வாசகங்கள் இருந்ததால் தான் இந்த பேனர்களை நாங்கள் கிழித்து எறிந்தோம். அப்போது காங்கிரசார் எங்களை கடப்பாறை, அரிவாள், மண்வெட்டியால் தாக்கினார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்துக்காக போராட வில்லை. தமிழ் ஈழத்துக்காக தான் போராடுகிறோம். நீங்கள் குரல் கொடுத்தால் நாங்கள் எந்தவிதமான போராட்டத்துக்கும் தயாராக இருக்கிறோம் என்றார்கள்.
அவர்கள் அருகில் அமர்ந்து கனிவுடன் பேசிய வைகோ நீங்கள் ஆத்திரப்படக்கூடாது, பொறுமையாக இருங்கள் என்று ஆறுதல் கூறினார்.
பின்னர் வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,
இந்திய வரலாற்றில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் அறவழியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொலை பாதகன் ராஜபக்சே மீது சர்வதேச விசாரணை நடத்தி குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாணவர்கள் 12 நாட்களாக உண்ணாவிரதம் உட்பட அற வழியில் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அறவழியில் போராடிய மாணவர்கள் மீது காங்கிரசார் திட்டமிட்டு குண்டாந்தடியுடன் வந்து தாக்கி இருக்கிறார்கள்.
எனவே காங்கிரசார் மற்றும் தூண்டியவர்கள் உட்பட அனைவர் மீதும் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களை உடனே கைது செய்ய வேண்டும். இதுதான் லட்சோப லட்சம் மாணவர்களின் எதிர்பார்ப்பு ஆகும். திருச்சியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.