பக்கங்கள்

பக்கங்கள்

5 ஏப்., 2013


யாழில் அரசியலில் ஈடுபடக் கூடாது! வெள்ளைவானில் கடத்தப்பட்டு ஆயதமுனையில் எச்சரிக்கை செய்யப்பட்ட நிசாந்தன்
யாழ்ப்பாணத்தில் அரசியலில் ஈடுபடக் கூடாது என ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனினால் வெள்ளை வானில் கடத்தப்பட்டு ஆயத முனையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக முன்னாள் மாநகர சபை உறுப்பினர் நிசாந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 3ம் திகதி தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு சென்றிருந்ததாகவும், வெள்ளவத்தையில் வைத்து வெள்ளைவானில் தான் கடத்தப்பட்டு அங்குள்ள கோழிக்கடை ஒன்றில் வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டு ஆயதமுனையில் அச்சுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திலும், யாழ்.பொலிஸ் நிலையத்திலும் மற்றும் யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழவிலும் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தன்னைக் கடத்தி ஆயுத முனையில் 5 மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தியதுடன் கேபிள் கம்பிகளினால் தாக்கியுள்ளதாக அவர் தனது மேலாடையைக் கழற்றி ஊடகவியலாளர்களுக்கு கண்ணீர் மல்க காட்டினார்.
தன்னை அரசியலில் இருந்து ஒதுங்குமாறும் அவ்வாறு ஒதுங்காவிட்டால் அடுத்த மாதத்திற்குள் உனது உயிர் பறிக்கப்படும் என கடும் தொனியில் எச்சரிக்கை செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.