பக்கங்கள்

பக்கங்கள்

2 ஏப்., 2013


புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் : சரத் பொன்சேகா

இன்று என் வாழ்க்கையில் முக்கியமான நாள். நாட்டு மக்கள் அனைவரும் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கி நாட்டை யுத்தத்திலிருந்து மீட்டது போன்று அராஜக
ஆட்சியிலிருந்து நாட்டை மீட்க ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பிட்டகோட்டேயில் அமைந்துள்ள ஷோலிஸ் ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜனநாயகக் கட்சியின் முதலாவது செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று என் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கி எமது நாட்டை அராஜக ஆட்சியில் இருந்து மீட்க புதியதொரு பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.
எமது நாட்டின் ஜனநாயக நிலைமை குறித்து மிகவும் கவலையாகவுள்ளது. மனித உரிமை மீறப்படுகின்றது. கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், சிறுவர் துஷ்பிரயோம் போன்ற குற்றச் செயல்கள் மலிந்து காணப்படுகின்றன. பொலிஸ் துறை மற்றும் சட்டத்துறை என்பன அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளன.
நாளுக்கு நாள் விலைவாசி என்பன உயர்வடைந்து செல்கின்றன. அரசாங்கம் நாட்டு மக்கள் மீது எவ்வித சிந்தனயுமில்லாது செயற்படுகின்றது. அதிகாரப்போக்கு மக்களை ஆட்டிப்படைக்கின்றது. உலக நாடுகளில் கடன்களைப் பெற்று அபிவிருத்தி என்ற போர்வையில் கொள்ளையடிக்கும் அரசாங்கத்தால் கிட்டத்தட்ட ஐந்து பரம்பரை வரை அந்தக் கடனை செலுத்த வேண்டிய நிலையுள்ளது.
எமது நாடு பொருளாதாரத்தில் பின்தள்ளப்பட்டு உள்ளது. ஆடை உற்பத்தி நிலையங்கள் மூடப்படுகின்றன. எதை எடுத்தாலும் ஊழல் மோசடிகள் நிறைந்தே காணப்படுகின்றன. எந்தவிதமான அபிவிருத்தியும் இல்லை. தற்போது உலக நாடுகளிடம் பிச்சை எடுக்கும் நிலைக்கு எமது நாடு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே நாட்டு மக்களின் நலன் கருதியும் நாட்டின் நலன் கருதியும் எனது இந்த அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளேன். முதலில் அரசாங்கத்தை மாற்றியமைக்க வேண்டும். அதற்கு புதிய அரசியல் கலாசாரத்தை முன்னெடுத்து நாட்டை பாதுகாத்து நாட்டை மீட்க அனைத்து மக்களும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
(படம் :ஜே.சுஜீவகுமார்
)