பக்கங்கள்

பக்கங்கள்

4 ஏப்., 2013


வட மாகாணசபை தேர்தலுக்கு முன் பொலிஸ், தேர்தல் ஆணைக் குழுக்களை நியமிக்க வேண்டும் : சுமந்திரன் எம்.பி.

வட மாகாணத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் இடம்பெறவேண்டுமாயின் அரசாங்கம் முதலில் பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழுக்களை நியமிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமென அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் கூறிக்கொண்டே வருகின்றது. அந்தவகையில் இவ் வருடம் செப்டெம்பர் மாதமும் வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமென அறிவித்துள்ளது. அதையே ஐ.நா. மனித உரிமை தீர்மானத்திலும் அரசாங்கம் சொல்லியிருப்பதாக எழுதப்பட்டுள்ளது. இதைத் தான் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையிலும் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வட மாகாண சபைத் தேர்தல் எப்போதோ நடந்திருக்க வேண்டும்.
தமிழ்க் கூட்டமைபின் மீதான அண்மைய தாக்குதல் சம்பவங்கள் அரசின் அச்ச உணர்வை வெளிக்காட்டுகின்றது. இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நடவடிக்கைகளை முடுக்கி விடுவதே அரசின் பிரதான நோக்கமாகவுள்ளது. எவ்வாறு இருப்பினும் வட மாகாணசபை தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்புக்கு மக்களின் ஆதரவு இருக்கும்.
இதேவேளை, வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பதாக பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழுக்களை அரசாங்கம் அமைக்க வேண்டும். இவ்வாறு இரண்டு சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தால் தான் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் நடைபெறுவது சாத்தியமாகும். அத்துடன் வெளிநாடுகளில் இருந்து தேர்தல் கண்காணிப்பாளர்களையும் அழைத்து காண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்
.