பக்கங்கள்

பக்கங்கள்

4 மே, 2013


முருகன், சாந்தன், பேரரறிவாளன் தூக்கை ஆயுள் தண்டனையாக குறைக்க பிரதமரிடம் திமுக எம்.பி.க்கள் மனு

தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து மனு அளித்தனர். 


அந்த மனுவில்,  ‘’மரணதண்டனை என்பது, மனித உரிமைகளை மறுப்பதாகும்.  மரணதண்டனை, இந்தியா கையொப்பமிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உரிமையை மீறுவதாகும். 
உண்மையில், மரணதண்டனை நடைமுறையில் உள்ள உலகின் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தகவல்படி, உலகில் 140 நாடுகள் மரண தண்டனையை ஒழித்து விட்டன. 
2007-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக வாக்களித்தது. இதனை, 2010-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி நடைபெற்ற 65-ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டம் ஏற்றுக்கொண்டது.  
தமிழ்நாட்டில், தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியின் போது மரணதண்டனை அங்கீகரிக் கப்படவில்லை. மரணதண்டனைகள், ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட பல நிகழ்வுகளை சுட்டிக்காட்ட முடியும். இம்மாதம் முதல் தேதி, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றில், மகேந்திரநாத் தாஸ் என்பவரது மரணதண்டனை, ஆயுள்தண்டனையாகக் குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. 
மகேந்திரநாத் தாஸ் மரணதண்டனை குறித்த கருணை மனு பதினோரு ஆண்டுகளுக்குப்பின் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், மரணதண்டனையை ஆயுள்தண்ட னையாகக் குறைத்து உத்தரவிட்டது. 
முருகன், சாந்தன் மற்றும் பேரரறிவாளன் ஆகியோரது வழக்குகளையும், மகேந்திரநாத் தாஸ் வழக்கு அடிப்படையில் பரிசீலிக்கவேண்டும் என்று  எங்களது தலைவர் சார்பில் கேட்டுக்கொள்கிறேhம். 1998-ஆம் ஆண்டு இந்தவரின் மரணதண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 
1991-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதில் இருந்து, 22  ஆண்டுகள் இந்த மூவரும் சிறைச்சாலையில் வாடி வருகின்றனர். ஒவ்வொருநாளும், மரணதண்டனையை எதிர்நோக்கி, நான்கு சுவர்களுக்கிடையே கிட்டத் தட்ட அவர்களது பாதி ஆயுட்காலம் முடிந்து விட்டது. 
இந்த சிறைவாசம், மரணதண்டனையைவிட கொடுமையானது. மரணதண்டனை என்பது ஒரு சட்டபூர்வ மான கொலை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஜனநாயக மற்றும் நாகரிக சமுதாயத்தைக் கொண்ட நமது நாட்டில் மரண தண்டனைக்கு எந்த இடமும் இல்லை. 
இதனை கருத்தில் கொண்டு, மகேந்திரநாத் தாஸ் மரணதண்டனை வழக்கில் அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, முருகன், சாந்தன் மற்றும் பேரரறிவாளன் ஆகியோரது மரணதண்டனை, மனிதாபி மான அடிப்படையில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட வேண்டும். 
22 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாழக்கையை கழித்துவிட்ட இவர்களது தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்க மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது. 
மனுவைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், “நாகரிக சமுதாயத்தில் மரண தண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வந்து கொண்டிருக்கிறது. இந்த பிரச்னையில் ஆழ்ந்த பரிசீலனைக்குப் பிறகு அரசு உரிய முடிவெடுக்கும் என்றும் கூறியதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார்.