பக்கங்கள்

பக்கங்கள்

25 மே, 2013

வடமாகாண சபைத் தேர்தல்- அரசாங்கத்திற்கு கோத்தபாய ராஜபக்ச எச்சரிக்கை
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் மாகாணங்களின் காணி, காவல்துறை அதிகாரங்களை பறிக்கும் வகையில், 13வது திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் திட்டம் எதுவும் அரசாங்கத்துக்கு இல்லை என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாதுகாப்புச் செயலர் என்ற வகையில் இந்த அரசாங்கத்தை எச்சரிக்க வேண்டியது எனது பொறுப்பு. மாகாணசபைகளுக்கு காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்குவது மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும். இன்னமும் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரல் தொடர்கின்ற சூழலில் அவர்களின் கைகளில் காவல்துறை அதிகாரங்கள் கிடைப்பது தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக அமையும்.
அரசாங்கம் சர்வதேச மற்றும் உள்நாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாமல் 13வது திருத்தம் குறித்து கவனமாக ஆராய வேண்டும். தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியன தங்களது கடுமையான எதிர்ப்பை வெளியிடுகின்றன. வடக்கு மாகாணசபை நிர்வாகம் ஈழத் திட்டத்தை தொடரக் கூடும்.
உத்தியோகபூர்வமாக வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்த வேண்டிய தேவை உள்ளது என தெரிவித்த கோத்தபாய, ஆனால் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு நாம் கடுமையான விலைகளைக் கொடுத்துள்ள நிலையில், இது புதிய போர்ச்சூழலை ஏற்படுத்துவதற்கான எங்கள் முட்டாள்தனமான செயலாக அமையும் எனத் தெரிவித்தார்.
எனது விருப்பத்தை அரசாங்கத்தின் மீது திணிக்க முடியாது. ஆனால், 13வது திருத்தத்தின் குறைபாடுகள் தொடர்பாக அவர்களுக்கு எடுத்துக் கூறுவேன்.
அரசாங்கம் உடனடியாக 13வது திருத்தம் குறித்து பரந்தளவிலான விவாதங்களை நடத்த வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக பகிரங்க விவாதம் நடத்தப்பட வேண்டும். வடக்கு மாகாணத்துக்கு காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்குவது பாதுகாப்புக்கு பிரதான சவாலாக அமையக் கூடும்.
அரசாங்கம் மேற்கொள்ளக் கூடிய தீவிரவாத எதிர்ப்பு விசாரணைகளில், வடக்கில் உருவாகக் கூடிய முரண்பட்ட நிர்வாகம் ஒன்று தலையிடக் கூடும். 
விடுதலைப் புலிகள் இந்திய - சிறிலங்கா உடன்பாட்டை ஏற்றுக் கொண்டிருந்தார்களேயானால் மிகச் சுலபமாக ஈழத்தை அடைந்திருக்க முடியும். தனியான நிர்வாகத்தை கோருவதற்கு வசதியான 13வது திருத்தத்தை அவர்கள் அப்போது சரிவரப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர்.
இராணுவ ஆற்றல் மீதான மிகையான நம்பிக்கையும், திமிரும் தான் அவர்களை 1987 ஒக்ரோபரில் இந்தியப் படைகளுக்கு எதிராகப் போரைப் பிரகடனம் செய்யத் தூண்டியது என்றும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.