பக்கங்கள்

பக்கங்கள்

21 மே, 2013


சிவசக்தி ஆனந்தன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொழும்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.
வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் அவருக்கு எடுத்த தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாகவே அவர் மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு வருமாறு வவுனியா பொலிஸ் நிலையம் ஊடாக அழைப்பாணை அனுப்பப்பட்டதையடுத்தே சிவசத்தி ஆனந்தன் இன்று காலை 10.00 மணிக்கு கொழும்பிலுள்ள பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றிருந்தார்.

அவருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் உடன் சென்றிருந்தார்கள்.

காலை 10.00 மணிக்கு ஆரம்பமான விசாரணை 12.15 வரையில் தொடர்ந்ததாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். கடந்த வருடத்தில் வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த தமிழ்க் கைதிகளிடமிருந்து மீட்கப்பட்ட கைத் தொiலைபேசிகளிலிருந்து பெறப்பட்ட இலக்கங்களின்படி சிவசக்த்தி ஆனந்தனுக்கு அங்கிருந்து பல தொலைபேசி அழைப்புக்கள் வந்ததாகவும், சிவசக்தி ஆனந்தனிடமிருந்து பல அழைப்புக்கள் கைதிகளுக்கு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த அதிகாரிகள் அவை தொடர்பாக சிவசக்தி ஆனந்தனிடம் விளக்கம் கேட்டனர். இதன்போது எவ்வாறான விஷயங்கள் பேசப்பட்டன எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்குப் பதிலளித்த ஆனந்தன், தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதாலும், பல வருடங்களாக குறிப்பிட்ட தொலைபேசியைப் பயன்படுத்துவதாலும் தனது இலக்கம் பலக்குத் தெரியும். அதேவேளையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் தனக்கு வரும் அழைப்புக்களுக்கு தான் பதிலளிப்பதாகத் தெரிவித்தார். வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது தொடர்பில் தனக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனுடன் தான் சிறைச்சாலைக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதாகவும் ஆனந்தன் தெரிவித்தார்.

இதனைவிட கைதிகள் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டால், கைதிகளுடைய நலன்கள், வழக்கு விவகாரங்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப விடயங்கள் தொடர்பாகவே பேசிக்கொள்வதாகவும், அதனைவிட அரசுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பேசிக்கொள்வதில்லை எனவும் சிவசக்தி ஆனந்தன் விளக்கமளித்தார். அதேவேளையில், கைதிகள் சிலர் தொடர்பு கொள்ளும் போது அவர்களது தொலைபேசியில் பணம் இல்லாத நிலையில் தொடர்பு துண்டிக்கப்பட்டால், அவர்களுக்கு தான் மனிதாபிமான அடிப்படையில் அழைப்பு எடுப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.