பக்கங்கள்

பக்கங்கள்

29 மே, 2013

திகாரில் அடைக்கப்பட்ட ஸ்ரீசாந்த்

சூதாட்ட புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்த், சண்டிலா உள்ளிட்டோர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஐ.பி.எல் தொடரில் ஸ்பாட்-பிக்சிங் செய்த ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான், அமித் சிங் உள்ளிட்ட
வீரர்களை டெல்லி பொலிசார் கடந்த மே 16ம் திகதி கைது செய்தனர்.
டெல்லி லோதி காலனியில் உள்ள “ஸ்பெஷல்” பிரிவு பொலிசார், கடந்த 12 நாட்களாக, இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
நேற்று பொலிஸ் காவல் முடிந்த நிலையில், ஸ்ரீசாந்த், சண்டிலா மற்றும் 2 புக்கிகள் சந்திரேஷ் படேல், அஷ்வனி என்ற திப்பு ஆகியோர் டெல்லி மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
அப்போது பொலிஸ் தரப்பில், இந்த பிக்சிங் விவகாரத்தில் தாவூத் இப்ராகிமுக்கு தொடர்பு இருப்பதாக முதன் முறையாக வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து பொலிசார் கூறுகையில், ஸ்ரீசாந்த் பிக்சிங்கில் வாங்கிய பணத்தை இன்னும் பறிமுதல் செய்யவில்லை. தவிர, நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்க வேண்டும்.
இதனால், பொலிஸ் காவலை நீட்டிக்க வேண்டும் என்று வாதிட்டனர். தவிர, ஸ்ரீசாந்த், சண்டிலா உள்ளிட்டோரின் பிணை மனு மீதான விசாரணையும் நடந்தது.
முடிவில், பொலிஸ் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, ஸ்ரீசாந்த், சண்டிலா மற்றும் 2 புக்கிகள் வரும் ஜூன் 4ம் திகதி வரை நீதிமன்ற காவலில் செல்ல உத்தரவிட்டார்.
இதையடுத்து ஸ்ரீசாந்த் உள்ளிட்ட அனைவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். ஸ்ரீசாந்த்தின் பிணை மனு மீதான விசாரணை ஜூன் 4ல் விசாரணைக்கு வருகிறது.