பக்கங்கள்

பக்கங்கள்

17 மே, 2013

காடுவெட்டி குரு உயிருக்கு ஆபத்து என்று அவசர வழக்கு 
காடுவெட்டி குருவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் அவரது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

மாமல்லபுரத்தில் கடந்த மாதம் நடந்த சித்திரை முழுநிலவு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், வன்னியர் சங்கத்தின் தலைவரும், பா.ம.க. எம்.எல்.ஏ.வுமான காடுவெட்டி குரு, மக்களிடையே வன்முறை தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டார். பின்னர், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் கோர்ட்டு காவலை நீட்டிப்பதற்காக திருக்கழுக்குன்றம் குற்றவியல் கோர்ட்டுக்கு குரு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு காடுவெட்டி குருவின் வக்கீல் கே.பாலு ஆஜராகி வாதம் செய்தார்.
அவர்,  ‘’காடுவெட்டி குருவை புழல் ஜெயிலில் இருந்து திருக்கழுக்குன்றம் கோர்ட்டுக்கு இன்று போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அப்போது, சாராயம் மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் மற்றும் ஆண்களுடன் ஒரே வாகனத்தில் குருவை போலீசார் அழைத்து சென்றனர்.
ஏற்கனவே காடுவெட்டி குருவுக்கு கொலை மிரட்டல் உள்ளது. ஆனால், அவரை பாதுகாப்பாக அழைத்து செல்லாமல், அவரை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற சிறை வாசிகளுடன் அவரை போலீசார் அழைத்து சென்றனர். இதனால் குருவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே குருவை தனி வாகனத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிட வேண்டும்’’என்று கூறினார்.
இதற்கு நீதிபதி எம்.வேணுகோபால், 'இதுகுறித்து நீங்கள் மனு தாக்கல் செய்யுங்கள். இந்த மனுவை 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்' என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து, காடுவெட்டி குருவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று அவர் சார்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.