பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூன், 2013

தமிழகத்தைச் சேர்ந்த 157 யாத்திரிகர்கள் சென்னை திரும்பினார்கள்: தமிழக அரசு தகவல்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளின் காரணமாக, ருத்ர பிரயாக் மற்றும் சமோலி மாவட்டங்களில்
உள்ள கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய திருத்தலங்களுக்கு சென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த யாத்திரிகர்கள் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்தனர். தமிழகத்தைச் சார்ந்த யாத்திரிகர்களை பத்திரமாக தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது.

டெல்லியிலுள்ள தமிழ்நாடு அரசு சிறப்பு பிரதிநிதி தலைமையில் தமிழ்நாடு வருவாய்த் துறை செயலாளர் மற்றும் மாநில நிவாரணம் மற்றும் நிர்வாக ஆணையர் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு உத்தரகண்ட் மாநில தலைநகரான டேராடூனுக்கு சென்று உத்தரகண்ட் மாநில அரசு மற்றும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, தமிழகத்தைச் சார்ந்த யாத்திரிகர்களை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும், சென்னைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. உத்தரகண்ட் மாநிலத்தில் புனித யாத்திரையாக சென்ற 671 யாத்திரிகர்களில் 157 யாத்திரிகர்கள் தமிழக அரசின் செலவில் பத்திரமாக சென்னை திரும்பியுள்ளனர்.
118 யாத்திரிகர்கள் புதுடெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்றும், நாளையும் சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்படுவர். மீதமுள்ள 396 யாத்திரிகர்களில் 382 யாத்திரிகர்களிடம் தமிழக அரசு அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளனர். விரைவில் இவர்கள் புதுடெல்லிக்கும் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
மீதமுள்ள 14 யாத்திரிகர்களில், 11 யாத்திரிகர்கள் கௌரிகுண்ட் பகுதியில் இருப்பதும், அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை விரைவில் ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த ஒருவரை இன்னும் தொடர்பு கொள்ள இயலவில்லை. 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.