இக் கொலை குறித்த பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இறுதியாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் துணைக்குழுவான சிறீ ரெலோ என்ற மக்கள் விரோத இயக்கத்துடன் தொடர்புடைய நபர்கள் கொலையாளிகள் என்ற ஆதாரபூர்வமான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலிகள் இயக்கத்தின் பெரும் தொகைப் பணம் குறித்த மோதல்கள் அதன் ஆதரவாளர்கள் இடையே நடைபெற்று வந்த காரணத்தால் அந்த இயக்கத்தின் புலம் பெயர் பிரிவுகளே கொலையின் பொறுப்பாளிகள் என்ற சந்தேகம் நிலவியது.
இறுதியாகக் கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் இக்கொலையின் சூத்திரதாரிகள் இலங்கை அரசாங்கமும் அதன் இராணுவத் துணைக்குழுவான சிறீ ரெலொவுமே என்று தெரியவருகிறது. ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் பிரஞ்சு போலிஸ் அவ்வியக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் இருவரைக் கைது செய்துள்ளது.
சயந்தன் வடிவேலு என்ற சிறீ ரெலோ இயக்கத்தின் 48 வயது நபரும், அதே இயக்கத்தைச் சேர்ந்த உதயகுமார் குலேந்திரன் என்ற 32 வயதான நபரும் கொலையுடன் நேரடியான தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரஞ்சு போலீசாரால் நேற்றய தினம் 05.06.2013 அன்று பாரீசின் புற நகர்ப் பகுதியான வில்ஜூவிவ் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து அதிகாலை 5 மணிக்குக் கைதாகியுள்ளனர்.
கைதாகியுள்ள அச்சுவேலியைச் சேர்ந்த சயந்தன் வடிவேலுவின் பெயரிலேயே இலங்கையில் சிறீ ரெலோ பதிவுசெய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. |